×

பயறு வகைகள் சாகுபடி செய்வதால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது

அரியலூர், டிச 8: அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் கிராமத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது என்று அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாலையா தெரிவித்துள்ளார்.

அரியலூரில் பாசிப்பயறு கோ-8 விதைப் பண்ணை வயலை நேற்று ஆய்வு செய்த அவர் விவசாயிகளிடம் மேலும் தெரிவித்ததாவது: பயறு வகைகள் சாகுபடி செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. அதிக அளவு காய் பிடிப்பிற்கு 2 சதவீதம் டி.ஏ.பி கரைசல் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். டி.ஏ.பி தெளிப்பதால் பூக்களின் உதிர்வு குறைவதோடு கூடுதலாக 20 சதவீதம் விளைச்சல் பெறலாம்.

வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன் சத்துகள் வேர்முண்டுகளில் சேகரித்து பயிர்களுக்கு கொடுக்கிறது. தழைச்சத்திற்காக நைட்ரஜன் உரம் இடுவதை குறைத்து கொள்ளலாம். ரசாயன உரங்களை குறைத்து கொண்டு இயற்கையாக கிடைக்கும் கால்நடை கழிவுகள், தாவரகழிவுகள், மண்புழு உரங்களை இடுவதன் மூலம் நமது மண் வளமான மண்ணாக மாற்றப்படும். வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன் ஈரப்பதத்தையும் காற்றோட்ட வசதியையும் தக்க வைத்துக்கொள்கிறது.

இதனால் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை சீராக்கி மண்ணை வளமாக்குகிறது. இதனால் பயிர் விளைச்சல் 70 சதவீதம் அதிகரிக்கும் என்றார். இந்த ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குநர் பழனிச்சாமி, உதவி இயக்குநர் சாந்தி, உதவி விதை அலுவலர் கொளஞ்சி, உதவி வேளாண் அலுவலர் தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பயறு வகைகள் சாகுபடி செய்வதால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Periyanagalur ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்