×

இயல்பு நிலைக்கு திரும்புகிறது ஓஎம்ஆர் சாலை

திருப்போரூர்: வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக கடந்த 4ம்தேதி மிக்ஜாம் புயல் உருவானது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசியதோடு கனமழையும் பெய்தது. கடந்த 4ம்தேதி புயல் காற்றுடன் மழை பெய்ததால் தையூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இதனால், ஓஎம்ஆர் சாலை வெள்ளத்தில் மூழ்கி பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சாலை துண்டிக்கப் பட்டதால் திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஓஎம்ஆர் சாலையில் நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக ஓஎம்ஆர் சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த ஆவின் பால் லாரி மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து பலரும் நடந்தும் பைக்கிலும் கால்வாய்களில் இறக்கியும் சென்றவர்கள் நேற்று காலை முதல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து லாரிகள் மூலம் சிமென்ட் குழாய்கள் மற்றும் ஜல்லித்துகள்கள், ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது. ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் முழுமையாக தோண்டப்பட்டு மண் மூட்டைகள் அடுக்கப்பட்டன. அவற்றில் சிமென்ட் குழாய்கள் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் போக்குவரத்து இயக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவாரண பணி மற்றும் சாலை அமைக்கும் பணிகளை திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனிடையே, தண்டலம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (55) என்பவர் கடந்த 4ம்தேதி ஓஎம்ஆர் சாலையில் நடந்து வீட்டுக்கு சென்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. படகில் சென்று பக்கிங்காம் கால்வாய் மற்றும் கழிவெளி பகுதிகளில் ஏதேனும் உடல் சிக்கி உள்ளதா? எனவும் தேடுகின்றனர்.

படூர் மற்றும் செங்கண்மால் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்ட இடங்களை தாம்பரம் மாநகர காவல்துறை இணை ஆணையர் மூர்த்தி, கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் பார்வையிட்டு மைக் மூலம் எச்சரிக்கை செய்தனர். இதனிடையே, தையூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டனர். முதல் மாடி வரை தேங்கி இருந்த வெள்ளநீரை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. தாழம்பூர் பகுதியில் டிஎல்எப் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்ததால் குடியிருப்பில் வசித்துவரும் 3500 குடும்பத்தினர் அவதிப்பட்டனர். டிராக்டர்கள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.

The post இயல்பு நிலைக்கு திரும்புகிறது ஓஎம்ஆர் சாலை appeared first on Dinakaran.

Tags : OMR ,THIRUPORUR ,MIKJAM ,NORTHEASTERN ,Chennai ,Chengalpattu ,Thiruvallur ,Kanchipuram ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை