×

கைம்பெண்கள் கிராமம்!

நன்றி குங்குமம் தோழி

ராஜஸ்தானில் பூண்டி மாவட்டத்தில் உள்ள புத்தபுரா என்ற கிராமத்தை ‘கைம்பெண்களின் கிராமம்’ என்று அழைக்கின்றனர். இங்குள்ள கிராமத்தில் இருக்கும் பல பெண்கள் கணவர் இல்லாமல் தனியாகத் தான் வசித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இங்கு பலரும் சிலிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுதான். ராஜஸ்தானில் 33,000க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. இது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சுரங்கங்கள் அதிகமாக உள்ள பகுதி.

இந்தியாவின் மணற்கல் உற்பத்தியில் 98% கொண்டுள்ளது. இங்குள்ள சுரங்கங்கள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டு, அதில் பலர் வேலை செய்து வருகிறார்கள். கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் மணற்கல் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் புத்தபுராவில் வசிக்கும் மக்களின் முக்கிய வேலையே இந்த சுரங்க பணிகள் தான். அதற்காக இங்குள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பாறை, மணல் மற்றும் குவார்ட்ஸ் ஆகியவற்றில் இருக்கும் சிலிக்கா தூசியை சுவாசித்து, சுரங்கங்களில் ஒவ்வொரு நாளும் அயராது உழைக்கிறார்கள். இவர்களுடைய கடின உழைப்புதான் இவர்களுக்கு மரணத்தையே கொடுத்துள்ளது.

சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் மண், கல் போன்றவற்றில் இருந்து வெளிவரும் புகையினால் சிலிகோசிஸ் என்ற கொடிய நோய் தாக்கி, அதனால் அவர்கள் இறப்பினை சந்திக்கிறார்கள். இந்த நோய் ஆரம்பத்தில் மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும். அதனைத் தொடர்ந்து வாயிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணத்தை சந்திக்கிறார்கள். சிலிகோசிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதற்குள்ளே அந்த நோய் அவர்களை முற்றிலும் பாதித்து விடுகிறது. விளைவு கிராமத்தில் உள்ள மொத்த ஆண்களும் இறந்து போயிள்ளனர்.

ஆண்களை மட்டுமே சார்ந்திருந்த பெண்கள் தற்போது வேறு வழியின்றி இந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த பெண்களில் பெரும்பாலோர் இறந்துபோன தங்களுடைய கணவரின் சிகிச்சைக்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இளம் கைம்பெண்களின் துயரம் அவர்களின் கணவரை இழப்பதோடு முடிவதில்லை. அவர்கள் தங்கள் கணவர்களை கொன்ற அதே வேலையில் ஈடுபட்டால் தான் அவர்களின் வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்ள முடியும். ஆனாலும் தொடரும் வறுமைக் காரணமாக குழந்தைகளையும் சுரங்க வேலைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

ராஜஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சிலிக்கோசிஸ் போர்ட்டலின் படி, மாநிலத்தில் தற்போது 48,000 நோயாளிகள் உள்ளனர். இதிலும் ஆயிரக்கணக்கானோர் ஆய்வக சோதனை மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்மையான கணக்குகள் மிகவும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. சிலிகோசிஸை எதிர்த்துப் போராடுவதில் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், இது 1952 ஆம் ஆண்டின் சுரங்கச் சட்டம் அல்லது தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல் குற்றமாகவோ அல்லது தொழில் சார்ந்த நோயாகவோ வகைப்படுத்தப்படவில்லை. மாறாக சான்றளிக்கப்பட்ட நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்நுட்ப ரீதியாக, நோய்வாய்ப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் எங்கு வேலை செய்தார்கள் என்பதை நிரூபிக்க முடியாததால், அவர்கள் தொழிலாளர் நீதிமன்றத்திற்குச் சென்று இழப்பீடு பெற முடியாது.

இத்தனை பேர் இறந்தாலும் வேறு வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இதே வேலைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைதான் இங்குள்ள மக்களுக்கு இருக்கிறது. இப்படி தினமும் இவர்கள் வேலைக்கு சென்றாலும் இவர்களுக்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு 350 ரூபாய்தான். அங்குள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் பிழைப்புக்கு வேறு வழியில்லை, இதை விட்டால் சில கைம்பெண்கள் அருகிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பைகளை எடுக்கும் வேலைக்கு தான் செல்ல வேண்டும். இதை தடுப்பதற்காக உலர் துளையிடுதல் என்று சொல்லப்படும் சுரங்கங்களில் ஈரமான துளையிடும் முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

சிலிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு 2019 முதல், ராஜஸ்தான் அரசாங்கம் நிதி இழப்பீடுகளை வழங்கியுள்ளது. நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் அரசு தரப்பில் இழப்பீடுகள் வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை என்பதுதான் அங்குள்ள மக்களின் ஆதங்கமாக உள்ளது. காரணம் அவர்களுக்கு நோயிற்கான மருத்துவம் ஒரு பக்கம் என்றால், அவர்களின் கடன் தொகைகள் மறுபக்கம் என அவர்கள் எப்போதும் நெருக்கடியில் தான் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அரசாங்கம் நிதி கொடுத்தாலும், அந்த தொகையினைக் கொண்டு மருத்துவம் மேற்கொண்டாலும், நோயின் பாதிப்பில் இருந்து தங்களின் கணவர்களை காப்பாற்ற முடியாமல் இங்குள்ள பெண்கள் தவிக்கிறார்கள். சிலிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் ராஜஸ்தானில் சுரங்கத் தொழிலாளியின் சராசரி ஆயுட்காலம் 60லிருந்து 40 ஆகக் குறைந்துள்ளது. சுரங்க தளங்களில் பணியிடத்தில் ஆண்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், கணவனை இழந்த பெண்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு குழுவாக இருப்பதன் மூலம் தங்களுக்குள் ஒரு பாதுகாப்பினை உணர்வதாக கூறுகிறார்கள் இப்பெண்கள். ஒரு பக்கம் கணவனை இழந்து நிற்கும் இவர்களின் ஆதரவு அவர்களின் குழந்தைகள் தான். ஆனால் சூழ்நிலைக் காரணமாக அவர்களும் அதே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நாம் உழைப்பது சந்தோஷமாக வாழ்வதற்கு தான். ஆனால் இங்குள்ள பெண்கள் தங்களின் வாழ்க்கை அழிந்துவிடும் என்பதை தெரிந்தே உழைத்து வருகிறார்கள். இது இப்படியே நீண்டால் ஒரு கட்டத்தில் அந்த கிராமமே முழுவதுமாக அழியும் வாய்ப்புள்ளது.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கைம்பெண்கள் கிராமம்! appeared first on Dinakaran.

Tags : Handmaiden village ,Kumkum Dodhi Buddhpura ,Bundi district ,Rajasthan ,Village of Handmaids' ,
× RELATED பூண்டி வட்டார விவசாயிகளுக்கு வேண்டுகோள்