×

சிவன் கோயிலில் பைரவரே மூலவர்

நள்ளிரவில் நடன ஓசை

திருப்பத்தூருக்கு அருகில் உள்ள திருத்தலம் பிரான்மலை. இங்குள்ள குன்றின் நடுப்பகுதியில் பைரவர் கோயில் உள்ளது. இங்கு நள்ளிரவுக்குப் பிறகு ‘‘வேல்.. வேல்.. மயில்’’ என்ற ஓசையும், பாதாள நடனம் ஆடும் ஓசையும் கேட்கின்றது. இந்த ஓசையானது கோயிலின் சுற்று மதிலில் இருக்கும் நந்தியின் அருகே கேட்கின்றது.

சிவன் கோயிலில் பைரவரே மூலவர்

திருச்சி பெரிய கடை வீதியில் உள்ளது “பைரவ நாதஸ்வாமி’’ கோயில். இங்கு பைரவர்தான் மூலவர். கடன் தொல்லை நீங்க அஷ்டமி தேய்பிறையில் இவரை பூஜை செய்கிறார்கள். சாபம், பாவம், கடன் தொல்லை, நோய் ஆகிய அனைத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கும் கோயில் இது! கோயிலின் இடது மூலையில் சிவன், தனி சந்நிதானத்தில் இருக்கிறார்.

அமர்ந்த நிலையில் பைரவர்

திருவாஞ்சியத் திருத்தலத்தில் பைரவர் தனது கோலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் யோகபைரவராக மேற்கு பார்த்து அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர்.

திரிசூலத்துடன் பைரவர்

மதுரையில் உள்ள அழகர் மலையில் உள்ள கள்ளழகர் பெருமாள் கோயிலில், பைரவர் இருக்கிறார். இவரை ‘‘ஹேமத பாலகர்’’ என்று அழைக்கிறார்கள். இந்த பைரவர் நீளமான தந்தங்களுடன், கோரைப் பற்கள் கொண்டு, திரிசூலத்துடன் நாய் வாகனத்தில் தரிசனம் செய்கிறார். இது ஒரு சிறப்பு அம்சமாகும்.

கலை அம்சமான ராசிச் சின்னம்

கும்பகோணம் அருகில் உள்ள அம்மா சத்திரம் என்ற திருத்தலத்தில் காலபைரவர் கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் அம்மன் சந்நதி முன்மண்டபத்திற்கு முன், மேல் தளத்தில் 12 ராசிகளின் அடையாளச் சின்னங்களுக்கு நடுவில், சுமார் 50 வருடங்களுக்கு முன் இருந்த தமிழ் எழுத்துக்களால் ஆன 1 முதல் 10 வரை உள்ளவற்றால் இடமிருந்து வலமாக கூட்டினாலும், மேலிருந்து கீழ் வரை கூட்டினாலும் ஒரே எண் 45 வரும்படி அமைத்துள்ளார்கள். 45-ன் கூட்டுத்தொகை 9. இது ஒரு சிறப்பான கலை அம்சமாகும்.

சண்ட பைரவர்

சண்டன் என்பதற்கு இயற்கைக்கு மாறான செயல்களை செய்பவன் என்பது பொருள். நீர்மேல் நடத்தல், நெருப்பை விழுங்குதல் போன்ற இயற்கைக்கு மாறான எதையும் எளிதில் செய்பவன் சண்டன் எனப்படுகிறான். பொன்நிறம் கொண்ட சண்ட பைரவர் சக்தி, குலிசம், கத்தி, கபாலம் ஏந்தியவராக மயில் வாகனத்தில் கௌமாரியுடன் தென்திசையில் எழுந்தருள்கின்றார்.

மங்கள பைரவர்

கார்த்திகை மாதத்துத் திங்கட்கிழமைகளில் சிவபெருமானைச் சிறப்புடன் போற்றி விரதம் இருக்கின்றனர். இதற்குச் சோமவாரவிரதம் என்பது பெயர். ஆலயங்களில் 108 அல்லது 1008 சங்குகளை வைத்து மிகப் பெரிய அளவில் வேள்வி செய்து சுவாமிக்குத் திருமுழுக்காட்டுகின்றனர். அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமைகள் பைரவருக்கு உரியதாகும். இவரைக் குறித்து இந்த செவ்வாய்க் கிழமைகளில் நோற்கப்படும் விரதம் “மங்கள பைரவ விரதம்’’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவாலயங்களில் இரவில் பைரவருக்கு விரிவான அபிஷேகம் செய்து நெய்யுடன் தைலக் காப்பு இட்டு வெற்றிலை மாலை, செவ்வரளி மாலை, வடைமாலை ஆகியவற்றை அணிவிப்பர்.

மாவும் பண்டங்களால் ஆன வடை, மோதகம், பணியாரங்களை நிவேதிக்கின்றனர். தேனில் இட்ட இஞ்சியை நிவேதிப்பதும் உண்டு. பானகம், நீர்மோர், பாயசம் ஆகியவற்றைப் படைப்பர். விழாவை நள்ளிரவுக்குள் முடிக்கவேண்டியது அவசியமாகும். அஷ்ட விதார்ச்சனை (எட்டு வகைப் பொருளால் அர்ச்சிப்பது) அஷ்ட நிவேதனம் முதலியவற்றைச் செய்கின்றனர். கார்த்திகை மாதத்துச் செவ்வாய்க் கிழமையில் பரணி கூடி வரும் போது செய்யப்படும் பைரவ வழிபாடுகள் ஆயிரம் மடங்கு மேலான பலனைத் தருகின்றன.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

The post சிவன் கோயிலில் பைரவரே மூலவர் appeared first on Dinakaran.

Tags : Bhairava ,Shiva temple ,Thiruthalam Branmalai ,Tirupattur ,Bhairava temple ,Bhairavare ,Moolavar ,
× RELATED ஆனக்கரை சிவன் கோயிலில் தாலப்பொலி...