×

திருமழிசை சிப்காட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரத்தில் சென்று அமைச்சர் ஆய்வு: தேங்கியுள்ள தண்ணீரை உடனே வெளியேற்ற உத்தரவு


திருவள்ளூர்: திருமழிசை சிப்காட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் பி.மூர்த்தி பொக்லைன் இயந்திரத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மிக்ஜாம் புயல் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் நிரம்பியதால், உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமழிசை சிப்காட் மற்றும் செம்பரம்பாக்கம் ஊராட்சி சந்திக்கும் இடத்தில் சேன்ட்ரோ சிட்டி நகர் அமைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதாலும், நேமம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தண்ணீர் வெளியேற வழி இன்றி திருமழிசை சிப்காட் மற்றும் சேன்ட்ரோ சிட்டி நகரில் வெள்ளம் புகுந்தது. இதனால் மழை நீர் இடுப்பளவு தேங்கி தரைத் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

இந்த திருமழிசை சிப்காட் பகுதி 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முதல் மாடிக்குச் சென்று தவித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான என்.ஓ.சுகபுத்ரா ஆகியோர் திருமழிசை சிப்காட் மற்றும் சேன்ட்ரோ சிட்டி நகரில் ஆய்வு செய்யச் சென்றனர். ஆனால் மழைநீர் தேங்கிய பகுதிகளில் காரில் செல்லவும், நடந்து செல்லவும் முடியாத சூழ்நிலை இருப்பதால் பொக்லைன் இயந்திரத்தில் ஏறிச்சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து சென்னீர்குப்பம் ஊராட்சியில் தேங்கியுள்ள மழைநீரை ஆய்வு செய்த அமைச்சர், ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்களை சீர்செய்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பூந்தமல்லி நகராட்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு அவர் உத்தரவிட்டார். பிறகு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு இடங்களில் அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், போர்வை, பாய், தலையணை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

The post திருமழிசை சிப்காட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரத்தில் சென்று அமைச்சர் ஆய்வு: தேங்கியுள்ள தண்ணீரை உடனே வெளியேற்ற உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thirumazhisai Chipgat ,Bokline ,Thiruvallur ,Minister ,P. Murthy ,Thirumazhisai Sibgad ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...