×

திருமழிசை பேரூராட்சியில் மழை பாதிப்பு பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு: பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தல்


திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் மழை பாதிப்பை சீர் செய்யும் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை பகுதிக்கு அருகில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் சிட்கோ பகுதியிலிருந்து பேரூராட்சியின் மடவிளாகம் பகுதிக்கு வரும் மழைநீரை செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்துக்கு செல்லும் கால்வாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மழைநீர் கால்வாயின் வழியாகவும், மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்வெட்டின் வழியே மழைநீர் செல்ல வழிவகை செய்வதையும் பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா ஆய்வு செய்தார்.

இதனையடுத்து திருமழிசை பேரூராட்சி வார்டு எண் 9ல் அமைந்துள்ள பட்டேல் தெருவில் ஏற்பட்டிருந்த மழைநீர் தேக்கத்தினை ஆயில் இன்ஜின் வைத்து அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டதுடன், மழைநீர் வடியும் வரை அப்புறப்படுத்தி பொதுசுகாதாரப் பணிகள் மேற்கொள்ளவும், கிருமி நாசினிகள் தெளிக்கவும் பேரூராட்சிகளின் இயக்குநர் அறிவுறுத்தினார். மேலும் புலம் பெயர்ந்த குடியிருப்புதாரர்கள் குறித்த விவரத்தை அவர் கேட்டறிந்தார். தற்போது குடியிருப்பவர்களுக்கு தேவையான அத்தியவாசிய தேவைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உதவிகள் வழங்க அறிவுரை வழங்கினார். மேலும் வார்டு எண் 10 மற்றும் 13ல் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதை உடனடியாக அப்புறப்படுத்த அவர் உத்தரவிட்டார்.

இதேபோல் காவல்சேரி மாநில நெடுஞ்சாலையின் குறுக்கில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் சுத்தம் செய்து வார்டு எண் 3ல் மழைநீர் தேக்கம் ஏற்படாமல் வழிந்தோடும் வகையில் முன்னேற்பாடுகள் செய்து எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் உடனுக்குடன் பணிகள் மேற்கொண்டதையும் பார்வையிட்டார். மேலும் மாசிலாமணி நகர் குடியிருப்பு பகுதியில் தற்போது வரை தொடர்ந்து மழைநீர் தேக்கம் உள்ளதை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், பேரூராட்சிப் பகுதி முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொண்டு தொற்று நோய் தடுக்கும் விதத்தில் கிருமி நாசினி தெளித்து பொதுசுகாதார பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயகுமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சித் தலைவர் வடிவேல், துணைத்தலைவர் மகாதேவன், செயல் அலுவலர் வெங்கடேசன், உதவி பொறியாளர் சுபாஷினி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

கும்மிடிப்பூண்டியில் ஆய்வு
மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன் குரானா, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் உடன் இணைந்து கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 15 வார்டுகளில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள தரைமட்ட மேம்பாலத்தின் கீழே கும்மிடிப்பூண்டி பெரிய ஏரியின் உபரி நீர் அதிகளவில் வெளியேறுவதை ஆய்வு செய்தவர், அங்கிருக்கும் கால்வாய்களை தூர்வாரி மழை வெள்ளம் சீராக வெளியேற அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் மழை வெள்ளம் தேங்கிருப்பதையும் ஆய்வு செய்தார். பின்னர், மழை வெள்ளம் வெளியேற உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டவர், உடனிருந்து பணிகளை மேற்பார்வையிட்டார். மேலும், கும்மிடிப்பூண்டியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளான தக்சிணாமூர்த்தி கோவில் தெரு, சாய் கிருபா நகர், மேட்டு தெரு, கோட்டக்கரை, சரண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தவர் உடனடியாக மழை வெள்ளத்தை அகற்றவும், கும்மிடிப்பூண்டி பஜாரில் வருங்காலங்களில் மழை வெள்ளம் தேங்காமல் இருக்கவும் உரிய மழை வடிகால் வசதிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

The post திருமழிசை பேரூராட்சியில் மழை பாதிப்பு பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு: பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thirumazhisai Municipal Corporation ,Tiruvallur ,Kiran Kurala ,Tirumala ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...