×

பொதுமக்களை மீட்டு, நிவாரணம் வழங்க சென்னை காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு: வேளச்சேரியில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் படகு மூலம் உணவு பொருட்கள் வழங்கினார்


சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கன மழையால் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, கல்லுக்குட்டை, பெரும்பாக்கம், நீலாங்கரை, காரப்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 3வது நாளாக நேற்றும் மழை நீர் வடியாததால் அப்பகுதியில் வசித்த மக்கள் உடமைகளை விட்டு முகாம்களிலும், அடுக்குமாடி கீழ்தளத்தில் உள்ளவர்கள் மொட்டை மாடியிலும் தஞ்சமடைந்துள்ளனர். மழைநீர் காரணமாக காமாட்சி மருத்துவமனை சிக்னலில் இருந்து வேளச்சேரி விஜயநகரம் மற்றும் வேளச்சேரி பள்ளிக்கரணை வரையிலும், மேடவாக்கத்தில் இருந்து பெரும்பாக்கம் வழியாக ஓஎம்ஆர் செல்லும் சாலையிலும் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைநீர் வடியாமல் உள்ள வேளச்சேரி பகுதியில் ெசன்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று காலை படகு மூலம் சென்று ஆய்வு செய்தார். அப்போது காவல்துறையின் பேரிடர் மீட்பு குழுவினர் செய்யவேண்டிய பணிகளை விரைவுபடுத்தினார். அதோடு வேளச்சேரி, டான்சி நகர் பகுதிகளில் படகு மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் உணவு பொருட்கள் இன்றி தவித்த மக்களுக்கு தண்ணீர் பாட்டில், பால், உணவு பொருட்கள், துணிகள் வழங்கினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் உதவி ெசய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.ேமலும், சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் பெறும் வகையில் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் இயங்கும் இந்த கட்டுப்பாட்டு மையத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவி கோரினால், பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பொதுமக்கள் 044- 23452359, 23452360, 23452361, 23452377 மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டு மையம் எண் 044- 23452437 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

டிரோன் மூலம் கண்காணிப்பு
கன மழையால் வேளச்சேரி, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் மீட்பு குழுக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ெசன்னை மாநகர காவல்துறையினர் ‘டிரோன்’ கேமரா மூலம் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை கண்காணித்து வருகின்றனர். அப்போது வெள்ளத்தில் வெளியேற முடியாமல் உதவி கேட்கும் மக்களை கண்டறிந்து உடனுக்குடன், சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் நேரில் சென்று உணவு வழங்கி, அவர்களை படகு மூலம் மீட்டு வருகின்றனர்.

The post பொதுமக்களை மீட்டு, நிவாரணம் வழங்க சென்னை காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு: வேளச்சேரியில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் படகு மூலம் உணவு பொருட்கள் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai Police ,Commissioner ,Sandeep Rai Rathore ,Velachery ,Chennai ,Pallikaranai ,Madipakkam ,Perungudi ,Kallukuttai ,Perumbakkam ,Neelangarai ,Mijam ,Sandeep Roy Rathore ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...