![]()
பெரம்பூர்: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையின் காரணமாக மாநகரமே வெள்ளைக்காடாக மாறியது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வாரிய ஊழியர்களும் மழைநீர் தேங்காத பகுதிகளிலும், வெளியேற்றப்பட்ட பகுதிகளிலும் மின்சாரம் விநியோகம் செய்து வருகின்றனர். வடசென்னையின் சில இடங்களில் இன்னும் முழுமையாக மழைநீர் வடியாத காரணத்தினால் பொதுமக்கள் மூன்றாவது நாளாக மின்சாரம் தடைபட்டுள்ளதை கண்டித்தும் மழைநீரை உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்க கோரியும் மழைநீரை அகற்ற கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் உள்ளிட்ட போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். கொடுங்கையூர் காமராஜர் நகர் பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டு பிரச்னையை சரி செய்வதாக கூறியதால் கலைந்து சென்றனர்.
ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலை பகுதியில், பேசின் பிரிட்ஜ் காந்தி நகர் பகுதியிலும், வியாசர்பாடி அசோக் பில்லர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓட்டேரி மற்றும் பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
The post மின்சாரம் வழங்க கோரி கொடுங்கையூர், பெரம்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.
