×

17 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டகாசம்

ராமேஸ்வரம்: புயல் எச்சரிக்கையால் ஒரு வாரத்திற்கு பிறகு பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்தனர்.வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் காற்றின் வேகம் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதை தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை நிர்வாகம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கியது.

இதையடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 800க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை மீனவர்கள் வழக்கம்போல மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், அப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்ட மீனவர்களை விரட்டியடித்தனர்.

மேலும் அப்பகுதியில் மீன் பிடித்த உயிர்தராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை கைப்பற்றியதுடன் படகில் இருந்த ஜெயஸ்டன், தல்ஷா, சார்லஸ், லாசர்கபிஷ்டன், தினேஷ், முனியசாமி, அருள்பிரிஷ்டன், ஜான்சைமன் ஆகிய 8 மீனவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதுபோல் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு படகையும்,அதில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 17 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,RAMESWARAM ,Dinakaran ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்