×

மிக்ஜாம் புயல் மழையால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 1 லட்சம் கார்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்: பி.எஸ்-6 இன்ஜின் கார்களை சரி செய்வதில் சிக்கல் என நிபுணர்கள் கருத்து

சிறப்பு செய்தி
மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் முழ்கி நாசமானது. இதில் பி.எஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களை பழைய நிலைக்கு சரி செய்வதில் பெரிய அளவில் சிக்கல் இருப்பதாக மோட்டார் வாகன தயாரிப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 2ம் தேதி முதல் 4ம் தேதி நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இடைவிடாமல் 36 மணி நேரம் பெய்த கனமழையால் வரலாறு காணாத அளவுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடானது.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகா எல்லைக்குட்பட்ட பகுதிகள் மிக கடுமையாக வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் மாதவரம், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்கள், சென்னை மாவட்டம் முழுவதும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கால் 4 மாவட்டங்களில் மட்டும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், சாலையோரம், நீர்நிலை வழிப்பாதை அருகே, கால்வாய் அருகே, தெருக்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய வகை கார்கள், சொகுசு கார்கள் தண்ணீரில் மூமுழ்கி நாசமானது. சாலையில் செல்லும்போது, காருக்குள் மழைநீர் புகுந்து ஆங்காங்கே பழுதாகி நின்றன. சென்னையை பொருத்தவரை மடிப்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, பெரம்பூர், ஓட்டேரி, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, தி.நகர், கே.ேக.நகர், கோயம்பேடு, ராயபுரம், ஆர்.கே.நகர் என பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீரில் சென்றபோது பி.எம்.டபிள்யூ, ஆடி, பென்ஸ், ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார், வால்வோ என ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி மதிப்பிலான கார்கள் பழுதாகி நின்ற காட்சிகளை காணமுடிந்தது.

ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகளவில் வசித்து வரும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, பெரும்பாக்கம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், வண்டலூர், அம்பத்தூர், ஆவடி, மாதவரம் பகுதிகளில் தான் கார்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமானது. பள்ளிக்கரணை ஏரியில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பூர்வாங்கரா அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதேநேரம், மேற்கு தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் 5 முதல் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீடுகள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்பட்ட கார்கள் அனைத்தும் நாசமானது. தண்ணீரில் மூழ்கிய கார்கள் அனைத்தும் ஒரு சில இடங்களை தவிர அப்படியே கிடக்கின்றன.

இந்த கார்களை மீட்பது எப்படி, முதலில் செய்யவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பிரபல மின்சார பேருந்து தயாரிக்கும் ‘ஆலக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட்’ நிறுவன பொது மேலாளர் ஞானவிஜயன் கூறியதாவது:
‘மழை வெள்ளத்தில் மூழ்கிய கார்களை அதன் உரிமையாளர்கள் தண்ணீர் வடிந்ததும் காரை இயக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. தண்ணீரில் மூழ்கிய காரை, அதன் தயாரிப்பு நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு தகவல் அளிக்கலாம். இல்லையேன்றால் தங்களுக்கு தெரிந்த மெக்கானிக் மூலம் காரில் உள்ள தண்ணீரை முதலில் வெளியேற்ற வேண்டும். பிறகு காரை கிரேன் உதவியுடன் தண்ணீர் இல்லாத மேடான பகுதியில் நிறுத்த வேண்டும். காரின் பேட்டரி இணைப்பை முதலில் துண்டிக்க வேண்டும். எலக்ட்ரானிக் மற்றும் எலட்ரிக்கல் இணைப்புகள் பெட்டிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய பிறகு ‘பீஸ்கள்’ அனைத்தையும் கழற்றி உலர்த்தி போடவேண்டும்.

பி.எஸ்-4 இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனம் என்றால் வேறு ஒரு பேட்டரியை கொண்டு வந்து அனைத்து மின் இணைப்புகளையும் சரி செய்து, இசியூ(எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்) நன்றாக உலர்த்தி காரை இயக்க வேண்டும். அதுவே பி.எஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் என்றால் காரில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு, கிரேன் உதவியுடன் வாகனத்தை அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வது அவசியம். ேதவையில்லாமல் பி.எஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட காரை தண்ணீர் வெளியேற்றியதும் இயக்க முற்பட்டால் இசியூ ஷார்ட் சர்க்கியூட் ஏற்பட்டு மொத்த காரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இந்தியாவில் கடந்த 2019 முதல் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பி.எஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட கார்கள் தான் அனைத்து நிறுவனங்களும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். 2016ல் வந்த பி.எஸ்-4 இன்ஜின் கார்களை கூட பழுது பார்த்துவிடலாம் ஆனால், பி.எஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட கார்கள் அனைத்து மென்பொருள் உதவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

ரூ.30 லட்சத்திற்கு மேல் உள்ள சொகுசு கார்களில் குறைந்தது 35 முதல் 40 இசியூ பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு இசியூவில் தண்ணீர் பட்டாலே கார் முழுவதும் உள்ள அனைத்து இசியூவும் பாதிக்கப்பட்டு பழுதாகி ஒரே இடத்தில் நின்று விடும். அதனால் தான் சொகுசு கார்கள் சாலையில் அதிகளவில் தண்ணீரில் செல்லும் போது நின்றன. பி.எஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களில் பேசிக் மாடல் கார்கள் மட்டும் தான் சாவி வருகிறது. பேசிக் மாடல் காருக்கு மேல் சாவிகள் இல்லை. அனைத்து சென்சார் மூலம் தான் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரி இல்லை என்றால் இந்த வகை கார்களை திறக்க கூட முடியாது.

எனவே, மழை வெள்ளத்தில் பாதித்த கார்களை எந்த காரணத்தை கொண்டும், தன்னிச்சையாக இயக்க முயற்சி செய்ய கூடாது. சர்வீஸ் சென்டர் மூலம் மெக்கானிக்குகள் வரழைத்து தான் மழையால் பாதித்த இடத்தில் இருந்து எடுக்க வேண்டும். பி.எஸ்-6 இஎன்ஜின் பொருத்தப்பட்ட கார்களை உள்ளூர் மெக்கானிக்கால் கையாள முடியாது. அனைத்தும் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மழைநீரில் முழுகிய காகளின் உரிமையாளர்கள் கவனத்துடன் செயல்பட்டு கார்களை பாதுகாத்து கொள்ளலாம்’. என்றார்.

மின்சார வாகனங்களை 90% பழுதுபார்ப்பது சிரமம்
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு மின்சார வாகனங்களுக்கு அதிகளவில் மானியம் வழங்கி வருகின்றது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் மின்சார வாகனங்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மின்சார கார் மற்றும் பைக்குகள் தண்ணீரில் முழுமையாக பாதிக்கப்பட்டால் அதில் உள்ள பேட்டரிகள் முற்றிலும் பழுதாகிவிடும். தண்ணீரில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நனைந்த பேட்டரியை மீண்டும் சரி செய்து பயன்படுத்த முடியாது. புதிய பேட்டரிகளைத்தான் பொருத்த வேண்டும். மின்சார கார் மற்றும் பைக்குகள் முற்றிலும் பேட்டரியை நம்பியே இயக்கப்படுகிறது. இதனால் பேட்டரி வாகனங்கள் தண்ணீரில் முழுமையாக நனைந்ததால் 90 சதவீதம் அதன் உரிமையாளருக்கு தான் இழப்பு.

ஒன்றரை லட்சம் இருசக்கர வாகனம் மழையால் பாதிப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் நிறுத்தப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் பி.எஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று தான் பழுதை சரிசெய்ய வேண்டும். உள்ளூர் மெக்கானிக்குகளால் இந்த வாகனங்களை பழுது பார்க்க முடியாது. பி.எஸ்-6 இன்ஜினுக்கு முன்பு வந்த இருசக்கர வாகனங்களை உள்ளூர் மெக்கானிக்குகள் எளிமையாக சரிசெய்ய முடியும். மழையால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை சரிசெய்யவும், உதிரிபாகங்கள் வாங்கவும் சென்னை புதுப்பேட்டை பகுதி, அண்ணாசாலை ஜி.பி.சாலையில் உள்ள கடைகளில் பாதிக்கப்பட்டோர் கூட்டம் அலைமோதுகிறது.

இயற்கை பேரிடரில் சிக்கும் வாகனங்களுக்கு தனி இன்சூரன்ஸ்
வழக்கமாக புதிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் உண்டு. ஆனால் இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் வாகனங்களுக்கு வழக்கமான இன்சூரன்ஸ் கிடைக்காது. அதற்கு வழக்கமான இன்சூரன்சுடன் இயற்கை பேரிடரால் பாதிப்புக்குரிய இன்சூரன்சும் சேர்ந்து இருந்தால் மட்டுமே மழையால் பாதித்த வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்கும். இந்த திட்டம் சுனாமிக்கு பிறகு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுகுறித்து புதிய வாகனங்கள் வாங்கும் உரிமையாளர்களுக்கு கார் விற்பனை நிறுவனங்கள் சொல்வதில்ைல. இயற்கை பேரிடருக்கான இன்சூரன்ஸ் சற்று கூடுதல் தொகை என்பதால் யாரும் அதை சேர்ந்து தங்களது வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுப்பதில்லை என்று இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மிக்ஜாம் புயல் மழையால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 1 லட்சம் கார்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்: பி.எஸ்-6 இன்ஜின் கார்களை சரி செய்வதில் சிக்கல் என நிபுணர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Migjam storm ,Mijam ,Chengalpattu ,Tiruvallur ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ...