×

காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி ஆலோசனை: 17 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 17 கட்சி பிரதிநிதிகள் நேற்ற கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள். மக்களவை தேர்தலில் பா.ஜவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்கள் உள்பட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியினர் இதுவரை 3 முறை கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலால் 4 மாதங்களாக இந்த கூட்டணி கூட்டம் நடக்கவில்லை. 5 மாநில தேர்தலில் மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோற்றதால் உடனடியாக இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி நேற்று மாலை 7 மணிக்கு டெல்லியில் உள்ள கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 17 கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல்நிலை சரியில்லாததால் பங்கேற்கவில்லை.

மேற்குவங்க முதல்வர் மம்தா உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றதால் கலந்து கொள்ளவில்லை. புயல் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை கவனிப்பதால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதே போல் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல்காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்திரி, மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் பிரமோத் திவாரி, பொதுச்செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், மற்றும் கவுரவ் கோகாய், நாசிர் உசேன், ரஜினி பட்டேல் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜேஎம்எம் கட்சி சார்பில் மஹுவா மஜ்ஜி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆர்எஸ்பி சார்பில் என்.கே. பிரேமசந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பினாய் விஷ்வம், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் லாலன்சிங், சமாஜ்வாடி சார்பில் ராம்கோபால்யாதவ், எஸ்டி ஹாசன், ஆர்எல்டி சார்பில் ஜெயந்த் சவுத்திரி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் வந்தனா சவான், ஆம்ஆத்மி சார்பில் ராகவ் சதா, திமுக சார்பில் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

17 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் டிசம்பர் 3வது வாரம் மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதில் அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி ஆலோசனை: 17 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Congress ,President ,Kharge ,New Delhi ,
× RELATED இந்தியா கூட்டணி ஒற்றுமை வலுப்பெற்றுள்ளது: கி.வீரமணி