×

டெல்டாவில் ஒரு வாரத்துக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட 2 லட்சம் மீனவர்கள்

நாகை: மிக்ஜாம் புயலால் ஒரு வாரத்துக்கு மேல் வீட்டிலேயே முடங்கி கிடந்த டெல்டாவை சேர்ந்த 2 லட்சம் மீனவர்கள் இன்று கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.வங்ககடலில் மிக்ஜாம் புயல் உருவானதால் கடல் சீற்றம் அதிகளவில் இருக்கும். இதனால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகவே காணப்பட்டது. நாகை, காரைக்கால் துறைமுகத்தில் கடந்த 3 நாட்களாக 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இதனால் நாகை மாவட்டத்தில் நேற்று 8வது நாளாக ஒரு லட்சம் மீனவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 10வது நாளாக 90 ஆயிரம் மீனவர்கள், தஞ்சை மாவட்டத்தில் 7வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதேபோல் புதுக்கோட்டையில் 5,000 மீனவர்கள், காரைக்காலில் 7வது நாளாக 5,000 மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் ஆந்திராவில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது. கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் கடல் சீற்றமும் குறைந்தது. இதனால் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான டோக்கன் நேற்று வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு விசைபடகுகளில் ஐஸ்கட்டி ஏற்றுவது, டீசல் நிரப்புவது, மீன்பிடி உபகரணங்களை ஏற்றுவது உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த 2.05 லட்சம் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு புறப்பட்டு சென்றனர். காரைக்காலை சேர்ந்த 5,000 மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கின்றனர்.

 

The post டெல்டாவில் ஒரு வாரத்துக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட 2 லட்சம் மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Delta ,Mikjam ,Dinakaran ,
× RELATED சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து...