×

கேரளாவில் மயக்க ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை: போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுக்க பணம் இல்லாததால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதுகலை மாணவியும், டாக்டருமான இளம்பெண் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (28). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தார். ஷஹ்னா, தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நன்கு படித்த, வேலையில் இருக்கும் மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியது இருக்கும். அவ்வளவு பணமோ, நகையோ பெற்றோரிடம் இல்லை. இதனால் ஷஹ்னா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஷஹ்னாவுக்கு இரவு பணி இருந்தது. பணிக்கு செல்லாததால் சக டாக்டர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷஹ்னா மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஷஹ்னா பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனையில். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது செலுத்தும் மயக்க ஊசியை போட்டு ஷஹ்னா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்ததும் மருத்துவக்கல்லூரிக்கு போலீசார் விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

* கூடை கூடையாக கொடுக்க யாரும் இல்லை

இதற்கிடையே ஷஹ்னா தங்கி இருந்த அறையில் இருந்து போலீசார் கடிதம் ஒன்ைற கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில், ‘இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய் விட்டார். திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* 150 பவுன், 15 ஏக்கர், பிஎம்டபிள்யூ கார் வரதட்சணையாக தர வேண்டும்

தற்கொலை செய்த டாக்டர் ஷஹ்னா, தன்னுடன் படித்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்துக்கு அவரும் சம்மதித்துள்ளார். ஆனால் வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் ஆகியவை வேண்டும் என காதலன் வீட்டார் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு ஷஹ்னாவின் வீட்டினரோ, ‘அவ்வளவு நகை, பணம் எங்களால் கொடுக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால் காதலனோ, ‘எனது பெற்றோர் கேட்ட வரதட்சணையை கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காது’ என்று கூறிவிட்டாராம். இது ஷஹ்னாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

The post கேரளாவில் மயக்க ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Government Medical College Hospital ,
× RELATED அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு...