×

3 மாநிலத்தில் பாஜ வெற்றி எதிரொலி; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மோதல்


புதுடெல்லி: வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு ஆளுங்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு பேட்டி அளித்தனர். மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜ ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சிப் பொருத்தப்பட்ட இயந்திரத்தை ஹேக் செய்து தேர்தல் முடிவை மாற்ற முடியும் என்றும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சி எம்பிக்கள் பல கருத்துக்களை தெரிவித்தனர். ஆளும்கட்சி எம்பிக்களும் அதற்கு பதிலடி கொடுத்தனர்.

தேசிய மாநாட்டு கட்சியின் எம்பி பரூக் அப்துல்லா: வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சந்தேகத்தை தீர்க்க வேண்டும். அப்போது தான் மக்களின் நம்பிக்கையை பெறமுடியும். ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்: வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் மக்களிடையே எதிர்மறையான கருத்துகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்: புதிதாக ஒன்றும் இல்லை. தோற்றதால் இவிஎம்கள் மீது பழி சுமத்துகிறார்கள். 2 நாட்களுக்கு முன்பே பா.ஜவுக்கு முடிவு ெதரியும் மபி முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் கூறுகையில்,’வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பே பா.ஜவுக்கு முடிவுகள் தெரியும். நாகாடா-கச்ரோட் தொகுதியில் பாஜ சார்பில் டாக்டர் தேஜ்பகதூர் சிங் சவுகான், காங்கிரஸின் திலீப் சிங் குர்ஜாரை தோற்கடித்தார்.

அனில் சாஜ்ஜெட்டி என்ற பா.ஜ நிர்வாகி தனது பேஸ்புக் பக்கத்தில் தேர்தல் முடிவு வெளியாகும் 2 நாட்களுக்கு முன்பு நாகாடா-கச்ரோட் சட்டமன்றத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன, எவ்வளவு வாக்குகள் வித்தியாசம் என்பதை எழுதுகிறார். முக்கியமாக, மொத்தம் 1,78,364 வாக்குகள் பதிவாகியுள்ளதாக டிசம்பர் 1ம் தேதி சஜ்ஜெட்டி பதிவிட்டுள்ளார். அதில் பாஜ வேட்பாளர் 93,000 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 77,000 வாக்குகளும் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் 2 நாள் கழித்து பா.ஜ வேட்பாளர் 93,552 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 77,625 வாக்குகளும் பெற்றுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்.எம்எல்ஏக்கள் சொந்த ஊரில் 50 வாக்குகள் கூட வாங்காதது எப்படி?: கமல்நாத் கேள்வி
மபி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறுகையில்,’ காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சொந்த கிராமத்தில் 50 வாக்குகள் கூட பெறவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம். இதுபற்றி ஆலோசனைகளை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. முதலில் அனைவரிடமும் பேசுவேன். மக்களின் மனநிலை காங்கிரசுக்கு சாதகமாக இருந்தது. உங்களுக்கு கூட தெரியும் என்ன மனநிலை என்று. ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? மக்களிடம் கேளுங்கள்’ என்றார்.

The post 3 மாநிலத்தில் பாஜ வெற்றி எதிரொலி; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : BJP ,ruling party ,New Delhi ,Opposition ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்