×

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை புதிய கட்டிட பணி முடிந்ததும் நோயாளிகள் மாற்றப்படுவார்கள்: ஆய்வுக்குப்பின் அமைச்சர் எ.வ.ேவலு தகவல்

தாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை புதிய கட்டிட பணி முடிந்ததும் நோயாளிகள் அங்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 49 குடும்பங்கள் பல்லாவரம் கன்டோன்மென்ட் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து தேவையான உணவு, போர்வை, பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் – குன்றத்தூர் சாலையில் உள்ள தரைபாலத்தில் அதிகளவில் மழைநீர் வெளியேறுவதை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு பொதுமக்கள் அப்பகுதி வழியே செல்ல வேண்டாம் என தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அனகாபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 50 பேரை சந்தித்த அமைச்சர் அவர்களுக்கு தேவையான உணவு, போர்வை, பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

அதன்பின் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு அதிகளவு மழைநீர் வெளியேறுவதை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் பார்வையிட்டு துரிதமாக நீர் வெளியேறிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி சாலையில் இருந்து 5 அடி தாழ்வாக மருத்துவமனை உள்ளதால் மழைநீர் உள்ளே வருவது வழக்கமாக உள்ளது. புதிய கட்டிட பணிகள் முடிந்ததும் நோயாளிகள் அங்கு மாற்றப்படுவார்கள். தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திற்கு சமமாக சென்னை நில பரப்பு இருப்பதால் மழைநீர் கடலில் உள்வாங்க முடியாமல் அதிக மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

வரும் மழை காலங்களுக்கு முன்னரே குரோம்பேட்டை அரசு மருத்துவனை தரம் உயர்த் தப்படும்’’ என்றார். இந்த ஆய்வின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளருமான சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை செயலாளர் சந்தரமோகன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த குமார் சிங், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post குரோம்பேட்டை அரசு மருத்துவமனை புதிய கட்டிட பணி முடிந்ததும் நோயாளிகள் மாற்றப்படுவார்கள்: ஆய்வுக்குப்பின் அமைச்சர் எ.வ.ேவலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Crompet Govt Hospital ,Minister ,E. V. Vavelu ,Thambaram ,AV ,Velu ,Krombettai Government Hospital.… ,Krombettai Government Hospital ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை...