×

மிசோரம் தேர்தலில் பரபரப்பு திருப்பம் எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றியது: ஜோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி முதல்வர், துணைமுதல்வர் உள்பட 9 அமைச்சர்கள் தோல்வி

அய்ஸ்வால்: மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றியை பெற்று முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் ஜோரம்தங்கா, துணை முதல்வர் உள்பட 9 அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4 மாநில வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பா.ஜ கைப்பற்றியது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. நவ.7ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த மிசோரம் மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை தள்ளிவைக்கப்பட்டது. அங்கு நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றியை பெற்றது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 27 தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. முதல்வர் ஜோரம் தங்கா தலைமையிலான ஆளும் மிசோ தேசிய முன்னணி படுதோல்வி அடைந்தது. அவரது தலைமையிலான ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களை மட்டுமே பிடித்தது. பாலக் மற்றும் சைஹா தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. அந்த கட்சி 23 இடங்களில் போட்டியிட்டது. லாங்ட்லாய் மேற்கு தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. காங்கிரஸ் 40 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. ஜோரம் மக்கள் இயக்கம் 2018ம் ஆண்டு தான் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது 8 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. தற்போது முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற ஜோரம் மக்கள் இயக்கத்தின் முதல்வர் வேட்பாளர் லால்துஹோமா அவர் போட்டியிட்ட செர்சிப் தொகுதியில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர் மல்சாவ்மசூலாவை 2982 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஆளும் மிசோ தேசிய முன்னணி படுதோல்வி அடைந்ததால் முதல்வர் ஜோரம் தங்கா நேற்று கவர்னர் ஹரிபாபுவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். அதே சமயம் ஆட்சி அமைக்க ஜோரம்மக்கள் இயக்கம் உரிமை கோரியது. இன்று ஜோரம் மக்கள் இயக்கம் சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் முதல்வராக லால்துஹோமா தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர், துணை முதல்வர் உள்பட 9 அமைச்சர்கள் தோல்வி: ஜோரம்தங்கா அமைச்சரவையில் இடம் பெற்ற 11 அமைச்சர்களில் 9 பேர் படுதோல்வி அடைந்தனர். ஜோரம்தங்கா அரசில் இரண்டு இணை அமைச்சர்கள் உட்பட 12 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் உள்துறை அமைச்சர் லால்சாமிலியானா இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்வர் ஜோரம்தங்கா அஸ்ஸ்வால் கிழக்கு-1 தொகுதியில் 2,101 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வேட்பாளர் லால்தன்சங்காவிடம் தோல்வி அடைந்தார். லால்தன்சங்கா 10,727 வாக்குகளும், ஜோரம்தங்கா 8,626 வாக்குகளும் பெற்றனர். மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா, துய்சாங் சட்டமன்றத் தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கம் வேட்பாளர் டபிள்யூ சுவானாவ்மாவிடம் தோல்வியடைந்ததார். துணைமுதல்வர் டவ்லூயா 6,079 வாக்குகளும், ஜோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் டபிள்யூ சுவானாவ்மா 6,988 வாக்குகளும் பெற்றனர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஆர் லால்தாங்லியா, ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் ஜெஜே லால்பெக்லுவாவிடம் 135 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மின்சாரம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர் லால்சிர்லியானா அய்ஸ்வால் வடக்கு-I தொகுதியில் 5,485 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் வன்லால்ஹ்லானாவிடம் தோல்வியடைந்தார். விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளை வகிக்கும் மற்றொரு முக்கிய அமைச்சர் சி லால்ரின்சங்கா லுங்கிலி மேற்கு தொகுதியில் 1,282 வாக்குவித்தியாசத்தில் ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் லால்கிம்புயாவிடம் தோல்வி அடைந்தார். கோலாசிப் தொகுதியில் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் கே.லால்ரின்லியானா, 1,169 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் லால்பாம்கிமாவிடம் தோல்வியடைந்தார். ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் லால்ஹிங்லாவா 4,819 வாக்குகள் வித்தியாசத்தில் அய்ஸ்வால் கிழக்கு 2 தொகுதியில் ஊரக வளர்ச்சி அமைச்சர் லால்ருத்கிமாவை தோற்கடித்தார்.

கலால் துறை அமைச்சர் லால்ரினவ்மா போட்டியிட்ட துய்கும் தொகுதியில் 2,161 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோரம் மக்கய் இயக்க வேட்பாளர் வனலாருத்தாவிடம் தோல்வியடைந்தார். சட்டப்பேரவை விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டி ஜே லால்னுன்ட்லுங்காவும், ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் லெப்டினன்ட் கர்னல் கிளெமென்ட் லால்மிங்தங்காவிடம் 329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். லால்னுன்ட்லுங்கா 6,994 வாக்குகளையும், லால்மிங்தங்கா 7,323 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

* 2 அமைச்சர்கள் மட்டுமே வெற்றி

மிசோரம் தேர்தலில் பள்ளிக் கல்வி அமைச்சர் லால்சந்தமா ரால்டே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்ட் ஆகியோர் தலா 2,019 மற்றும் 306 வாக்குகள் வித்தியாசத்தில் துய்வால் மற்றும் ஹாவ்சக் தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

* ஆட்சிக்கு எதிரான அலையால் தோல்வி முதல்வர் ஜோரம்தங்கா

தேர்தல் தோல்வி குறித்து மிசோ தேசிய முன்னணி தலைவரும், முதல்வருமான ஜோரம்தங்கா கூறுகையில்,’ஆட்சிக்கு எதிரான அலையால் தோற்றோம். மேலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சிரமம் காரணமாக அரசின் செயல்திறனில் மக்கள் திருப்தி அடையவில்லை. இதனால் தான் எங்கள் அரசு தோற்றது. இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பா.ஜ கூட்டணியில் இருந்து விலகவில்லை’ என்றார்.

* மிசோரம் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவை கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினர்.

* இந்திராகாந்தியின் காவலர் பணியில் இருந்து மிசோரம் முதல்வராகும் லால்துஹோமா

மிசோரம் முதல்வராக பதவி ஏற்க உள்ள லால்துஹோமா 73வயதான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காவலராக இருந்தவர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் எம்.பி ஆவார். 2018ல் சட்டப்பேரவை தேர்தலை முதலில் சந்தித்து 8 இடங்களில் வென்றாலும் 2019ல் தான் அரசியல் கட்சியாக பதிவு ஜோரம் மக்கள் இயக்கம் பதிவு செய்யப்பட்டது. மிசோரம் மாநிலத்தில் 30 ஆண்டுகளாக காங்கிரஸின் லால் தன்ஹாவ்லா மற்றும் மிசோ தேசிய முன்னணியின் ஜோரம்தங்கா ஆகிய இரு மூத்த அரசியல்வாதிகள் மட்டுமே முதல்வர் பதவியை அலங்கரித்து வந்தனர். தற்போது முதல் முறையாக லால்துஹோமா முதல்வராக உள்ளார்.

லால்துஹோமா முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் மாநாட்டுக் கட்சியின் வேட்பாளர் லால்மிங்தங்காவிடம் 846 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதே ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 1988ல் காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் எம்பி என்ற பெயரை லால்துஹோமா பெற்றார். 2018 தேர்தலில் சுயேட்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றதன் மூலம் ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு மாறியதாகக் கூறி, 12 மிசோ தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்ததை அடுத்து, 2020ல் மிசோரம் சட்டமன்றத் தலைவர் லால்ரின்லியானா சைலோவால் எம்எல்ஏ பதவியில் இருந்து லால்துஹோமா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மிசோரமில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினர் லால்துஹோமா ஆவார். ஆனால் அவர் 2021ல் செர்ச்சிப் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது முதல்வராக அவர் பதவி ஏற்க உள்ளார்.

The post மிசோரம் தேர்தலில் பரபரப்பு திருப்பம் எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றியது: ஜோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி முதல்வர், துணைமுதல்வர் உள்பட 9 அமைச்சர்கள் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Zoram People's Movement ,Chief Minister ,Deputy ,Aizawl ,Mizoram assembly elections ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...