×

சென்னை, புறநகர் பகுதிகள் வெள்ளக்காடானது 47 ஆண்டுக்கு பின் பெருமழை: ரயில் பஸ் சேவை ரத்து புயல் இன்று கரை கடக்கிறது திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

சென்னை: மிக்ஜாம் புயலால் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 36 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து கொட்டி தீர்த்த பெருமழையால் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தீவாக மாறியது. திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் ரயில், பஸ் சேவை ரத்தானது. இன்று முற்பகலில் புயல் கரையை கடக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ‘மிக்ஜாம் புயல்’ வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று ‘தீவிர புயலாக’ சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று(செவ்வாய்கிழமை) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையில் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நேற்று முன்தினம் காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக இரவு 9 மணிக்கு மேல் பலத்த காற்று மற்றும் பேய் இரைச்சலுடன் மழை கொட்டி தீர்க்க தொடங்கியது. பலத்த காற்றால் வீட்டில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் டமார், டமார் என்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. சில வீடுகளில் ஜன்னல்களின் கண்ணாடிகள் ெநாறுங்கி விழுந்தது. இதனால் சென்னைவாசிகள் இரவில் தூங்காமல் விழித்திருக்க வேண்டிய நிலை உருவானது. அது மட்டுமல்லாமல் பல இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால், நேற்று முன்தினம் இரவு முழுவதுமே சென்னை மக்களுக்கு பயத்துடனே முடிந்தது. இரவு முழுவதும் விடாமல் கொட்டி தீர்த்த மழையால் சென்னையில் அனைத்து சாலைகளிலும் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை, சாந்தோம், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, வடபழனி, வள்ளுவர் கோட்டம், அடையாறு, திருவான்மியூர், கிண்டி, அசோக் நகர், கே.கே.நகர், சாலிகிராமம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, ராயபுரம், பாரிமுனை, சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆவடி, சோழவரம், திருவள்ளூர், கொட்டூர், பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பல கி.மீ. தூரத்துக்கு மழைநீர் தேங்கி சாலை இருக்கும் இடம் தெரியாமல் தீவு போல் காட்சியளித்தது. இதனால், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சாலைகளில் தேங்கி உள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அரசு, தனியார் அலுவலகங்கள், ரேஷன் கடைகள், டாஸ்மாக் என அனைத்தும் மூடப்பட்டன. செல்போன் சேவையும், இணையவழி சேவையும் பல மணி நேரம் முடங்கியது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் சென்னை மக்களை அப்படியே முடக்கி போட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேறவே முடியவில்லை. வீடுகளில் முடங்கிய மக்கள், மழையால் உறவினர்கள், நண்பர்கள் நிலை என்ன ஆனதோ? என்று பரிதவித்தனர். சென்னை சாலையில் ராட்சத மரங்கள் விழுந்துள்ளதாலும், மழைநீர் தேங்கியதாலும், பலத்த காற்று வீசி வருவதாலும் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. மழை குறைந்ததும் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. முக்கிய சாலைகள் அனைத்தும் மூழ்கிய நிலையில், சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கனமழையின் காரணமாக 15க்கும் அதிகமான இடங்களில் பெரிய அளவிலான மரங்கள் ேவரோடு சரிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணியில் ராட்சத இயந்திரங்கள் வரவழைத்து மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நேற்று காலை 8 மணி வரை சென்னை மற்றும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் நலன் கருதி ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. குறிப்பாக ஆவடி, அரக்கோணத்தில், திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் அனைத்தும் சென்ட்ரலுக்கு இயக்கப்படவில்லை. இதனால், சென்ட்ரலுக்கு வர வேண்டிய பயணிகள் அனைத்தும் குழந்தைகளுடன் கடும் பாதிப்புக்குள்ளாகினர். சென்னையில் ஒரு சில இடங்களில் பேருந்துகள் இயங்கினாலும் 8 மணி வரை தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இயக்கப்பட்ட பஸ்கள் பயணிகள் கைக்காட்டிய இடங்களில் எல்லாம் நிறுத்தி, ஏற்றி சென்றனர். மழையில் உதவிய மாநகர பஸ் டிரைவர்களுக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்புறம் உள்ள சாலை வெள்ளத்தில் மூழ்கியது. இதே போல அரும்பாக்கம் ஸ்டேஷன் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை அணுகுவதில் சிறிது சிரமம் ஏற்பட்டது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நிறைய பேர் நிவாரண மையங்களுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. சென்னையில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் ராயப்பேட்டை, அசோக் நகர், வடபழனி வெள்ள நீரில் மிதக்கிறது. வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் கார்களில் வந்தவர்கள் ஆங்காங்கே மாட்டி தவித்த காட்சியை காண முடிந்தது. இரண்டு சக்கர வாகனங்கள் தண்ணீரில் முழ்கி ஆப் ஆனது. இதனால், ஆங்காங்கே மேடான இடத்தில் நிறுத்தி விட்டு சென்றனர். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கோயம்பேடு வரை உள்ள சாலையில் சராசரியாக 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. மேலும் ராயப்பேட்டையில் இருந்து வள்ளூவர் சிலை வரை பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால், அந்த சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சாலை பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருந்தது. இதே போல பிராட்வே பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால், பயணிகள் அனைவரும் பஸ் நிலையத்திற்கு வெளியேவே இறங்கி விடப்பட்டனர். மேலும் பிராட்வே பஸ் நிலையத்தை சுற்றி இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கிய காட்சியை காண முடிந்தது.

இதே போல சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. குறிப்பாக ஆம்புலன்ஸ்கள் கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வெள்ள நீரில் சிக்கி தவித்தது. சென்னையில் பல இடங்களில் பெட்ரோல் பங்க், கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும் அடைக்கப்பட்டதோடு, உணவு டெலிவரியும் முடங்கியதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சென்னை பெருங்குடியில் 29 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆவடி 28 செ.மீ, ஆலந்தூர், சென்னை விமானநிலையம் தலா 25, அடையார், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், புழல் ஏஆர்ஜி, சோழவரம் தலா 23 செ.மீ, மகாபலிபுரம், எம்ஜிஆர் நகர், கோடம்பாக்கம், சிடி மருத்துவமனை தண்டையார்பேட்டையில் தலா 22 செ.மீ, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், டிஜிபி அலுவலகம், பள்ளிக்கரணை, அண்ணா பல்கலைக்கழகம், பொன்னேரியில் தலா 21 செ.மீ, புழல், பெரம்பூர், ஐஸ் ஹவுஸ், செங்குன்றத்தில் தலா 20 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது என்றார். நேற்று இரவு 10 மணியுடன் 28 மணி நேரம் தொடர்ச்சியாக கொட்டிய மழையால் சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழக அரசும் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தி உள்ளது. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க வெளியே சுற்றும் வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. சென்னையில் தற்போது பெய்து வரும் மழை கடந்த 2015ம் ஆண்டு கொட்டிய மழையை மிஞ்சி விட்டது. 2015ம் ஆண்டு 33 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் தற்போது 44 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. 1976ல் சென்னையில் 45 செ.மீ மழை பதிவாகி இருந்தது. தற்போது 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

* மேலும் 2 காற்றழுத்தம் தமிழகம் முழுவதும் மழை கொட்டும்

மிக்ஜாம் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், லட்சத்தீவு அருகே வரும் 7 அல்லது 8ம் தேதி மேலும் ஒரு காற்றத்தழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. மேலும் 8ம் தேதி அந்தமானுக்கு தெற்கு பகுதியில் ஒரு காற்றத்தழுத்தம் உருவாக உள்ளது. இது, வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளுக்கு நெருங்கி வந்து 12ம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் மழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

* படிப்படியாக மழை குறையும்…

சென்னையில் நேற்று இரவு 10 மணி வரை மழை விடாத சூழலில், மேலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மிக்ஜாம் தீவிர புயல் சென்னையில் இருந்து மெதுவாக நகரத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போது மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. காற்று மாற்றங்களின் அடிப்படையில் சென்னையில் இருந்து வடதிசையில் நகர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 6 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழக வடமாவட்டங்களில் படிப்படியாக மழை குறைய தொடங்கும். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10.கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது’’ என்றார்.

* அரசின் சமயோஜித நடவடிக்கையால் பெரும் விபத்து, உயிர் சேதங்கள் தவிர்ப்பு

அரசின் முன் யோசனை நடவடிக்கையால் 28 மணி நேரத்துக்கும் மேல் இடைவிடாத கனமழை, புயல் வீசியும் பெரும் விபத்து, உயிர் சேதங்கள் மற்றும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதற்காக சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். மிக்ஜாம் புயல், கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்று வானிலை ஆய்வு மையம் தமிழக அரசுக்கு எச்சரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி தூரித நடவடிக்கையில் இறங்கினார். அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து உடனடியாக இந்த மாவட்டங்களுக்கு சென்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் பொது விடுமுறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதாவது இந்த 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டது.

மேலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது. இதனால், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்தது. புயல் நேரம் மற்றும் கனமழையின் போது பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளே இருக்க வேண்டும். அவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அரசின் வேண்டுகோளை ஏற்று அவசிய தேவையே தவிர இந்த 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். பெயரளவுக்கு கூட வெளியே வரவில்லை. இதே போல கனமழை பெய்ய தொடங்கிய உடனே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. அரசின் இது போன்ற நடவடிக்கையால் இடைவிடாமல் தொடர்ச்சியாக 36 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை, பலத்த காற்று அடித்த பிறகும், இவ்வளவு வெள்ளப்பெருக்கு, தண்ணீர் தேங்கிய பிறகும் எந்தவித பெரும் சேதமும் ஏற்படவில்லை. மேலும் காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்தி கம்பிகள் அறுந்து விழுந்தாலும் பெரும் உயிரிழப்பு ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. ஏனென்றால் மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும், பொதுமக்கள் வெளியே வராததாலும் இதற்கு முக்கிய காரணமாகும். தமிழக அரசின் இது போன்ற முன்யோசனை நடவடிக்கையே 47 ஆண்டுகள் இல்லாத அளவில் பெரும் மழை பெய்தும் ெபரும் சேதம், உயிரிழப்பு தவிர்ப்பிற்கு முக்கிய காரணம் என்று தமிழக அரசை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

* 4 மாவட்டங்களுக்கு இன்றும் பொதுவிடுமுறை

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் நேற்று முன்தினம் போல் இன்றும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் அதிவேக காற்றுடன் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி இன்று பொதுவிடுமுறை நாளாக அரசு அறிவிக்கிறது. இந்த 4 மாவட்டங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

* கூடுதலாக பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்ப வேண்டும் அமித்ஷாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்தும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொண்டார்.முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் உறுதியளித்தாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, புறநகர் பகுதிகள் வெள்ளக்காடானது 47 ஆண்டுக்கு பின் பெருமழை: ரயில் பஸ் சேவை ரத்து புயல் இன்று கரை கடக்கிறது திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai, Suburban Vilakada ,Thiruvallur District ,CHENNAI ,STORM MIKJAM ,Chennai, Suburbs Vilakada ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...