அய்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் லால்துஹோமா தலைமையிலான சோரம் மக்கள் இயக்கம் எதிர்கட்சி ஆட்சியை பிடிக்கிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் நேற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிசோரம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
தேவாலயங்களும் இந்த கோரிக்கையை வைத்துள்ளன. அதையடுத்து 4ம் தேதி (இன்று) வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கிடையே நேற்று ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரசும் ஆட்சி அமைக்கின்றன. இந்நிலையில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் கடந்த மாதம் 7ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் சுற்றுகள் வாரியாக வாக்குகள் முன்னிலை விபரங்கள் வெளியிடப்பட்டது.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அம்மாநில முதல்வராக ஜோரம் தங்கா இருந்து வருகிறார். அதேவேளை, சோரம் மக்களின் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன. மிசோரத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது சோரம் மக்களின் இயக்கம் வெற்றிபெற்று ஆட்சியமைக்குமா? அல்லது பாஜக அல்லது காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. வாக்கு எண்ணிக்கைகளின் முன்னிலை நிலவரப்படி இன்று மதியம் 2 மணிக்கு, லால்துஹோமா தலைமையிலான சோரம் மக்கள் இயக்கம் 26 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மை பலத்தை எட்டியது.
ஜோரம்தங்கா தலைமையிலான ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், பாஜக 3 இடத்திலும் முன்னிலை வகித்தது. முன்னணி நிலவரங்களின்படி பார்த்தால், எதிர்கட்சியான லால்துஹோமா தலைமையிலான சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
The post ஜோரம்தங்கா தலைமையிலான முன்னணிக்கு பின்னடைவு; மிசோரமில் எதிர்கட்சி ஆட்சியை கைப்பற்றியது: லால்துஹோமா முதல்வராக வாய்ப்பு appeared first on Dinakaran.