×

ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கரில் முதல்வர்கள் தேர்வில் ஆச்சரியம் தருமா பாஜ?.. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் வாய்ப்பு

மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கரில் ஆட்சியை பிடித்துள்ள பாஜ அம்மாநிலங்களில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மூன்று மாநிலங்களிலுமே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே பாஜ தேர்தலை சந்தித்துள்ளது. மபியை பொறுத்த வரை தேர்தலுக்கு முன்பாக, சிவ்ராஜ் சிங் சவுகான் மீது சில அதிருப்திகள் நிலவினாலும் இங்கு பாஜ தற்போது அமோக வெற்றி பெற்றுள்ளதால் அதிருப்திகளை நொறுக்கித் தள்ளி சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றதாக கூறப்படுகிறது.

ஆனால், முதல்வர் தேர்வில் பல ஆச்சரியங்களை இதற்கு முன் பாஜ நடத்தி உள்ளது. குறிப்பாக, உபியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தலில் போட்டியிடாத யோகி ஆதித்யநாத்தையும், உத்தரகாண்ட்டில் புஷ்கர் சிங் தாமியையும் முதல்வராக்கி உள்ளது. அதே போல தற்போது மபியில் திமானி தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் நீண்டகாலமாக மபி முதல்வராக வேண்டுமென்ற கனவுடன் இருக்கும் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரில் யாரையாவது முதல்வராக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்பதால்தான் காங்கிரசில் இருந்து விலகி ஜோதிராதித்ய பாஜவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜேவுக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், ஒன்றிய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், மாநில கட்சி தலைவர் சிபி ஜோஷி, பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்த தியா குமாரி மற்றும் மஹந்த் பாலக்நாத் ஆகியோர் முதல்வர் போட்டியில் இருக்கின்றனர். ஒன்றிய அமைச்சர் மேக்வால் பட்டியல் சாதியை சேர்ந்தவர். பாலக்நாத், இந்தி பேசும் மாநிலங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட ஓபிசி பிரிவான யாதவ சமூகத்தை சேர்ந்தவர். அதோடு இவரது இந்துத்துவா அடையாளம் கூடுதல் வாய்ப்பை சேர்க்கிறது.

இவர்களை எல்லாம் விட்டுவிட்டு, ராஜஸ்தானில் 3 முறை எம்எல்ஏவான மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை முதல்வராக பாஜ தேர்வு செய்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. யோகி ஆதித்யநாத், புஷ்கர் தாமி போல ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவ கஜேந்திர சிங் ஷெகாவத் போன்ற ஒருவருக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவி வழங்கவும் வாய்ப்புண்டு என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. சட்டீஸ்கரில் முன்னாள் முதல்வர் ராமன் சிங், மாநில பாஜ தலைவர் அருண் குமார் சாவ், எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால் கவுசிக் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஓபி சவுத்ரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களாக உள்ளனர்.

பாஜவுக்கு வெற்றி தேடித்தந்த மகளிருக்கு ₹1000 நிதி திட்டம்
மபியில் தேர்தல் கணிப்புகள் அனைத்து காங்கிரசுக்கு சாதகமாக இருந்தாலும் பாஜ வென்றது குறித்து அக்கட்சியினர் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு முன்பாக மாநிலம் முழுவதும் தொண்டர்கள், நிர்வாகிகள் பிரிந்து கிடந்தனர். அவர்களை ஒருங்கிணைக்க கட்சி மேலிடம் தீவிரமாக பணியாற்றியது. 14 மாவட்டங்களுக்கு 14 மூத்த தலைவர்களை நியமித்தது. அவர்கள் உள்ளூர் நிர்வாகிகள், நகராட்சி, பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாட 50க்கும் மேற்பட்ட கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

முதல்வர் சவுகான் நேரடியாக தொண்டர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பாஜ தலைவர்கள் நேரடியாக தொகுதிக்கு வருதல், மாநிலத்தில் தங்கியிருத்தல் போன்ற நடவடிக்கைகள் பூத் அளவில் தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தது. பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘மேரா பூத் சப்சே மஜ்பூத்’ என்ற பிரசாரம் பூத் மட்டத்தில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தியது. கடைசி கட்டத்தில் முதல்வர் சவுகானின் ‘லட்லி பெஹ்னா’ எனும் மகளிருக்கு மாதம் ₹1000 நிதி உதவி வழங்கும் திட்டம் பெண்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைத்து கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைத்தது’’ என்றனர்.

The post ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கரில் முதல்வர்கள் தேர்வில் ஆச்சரியம் தருமா பாஜ?.. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Mabi ,Chhattiskar ,Lok Sabha ,Speaker ,Om Birla ,Bahia ,Chhattisgarh ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...