×

தேசிய அரசியல் கனவு தகருமா?.. 3வது முறை முதல்வராகும் வாய்ப்பை நழுவ விட்ட கேசிஆர்: வரலாற்று வாய்ப்பை இழந்தார்

ஐதராபாத்: தெலங்கானாவில் 3வது முறையாக ஆட்சி அமைக்கும் வரலாற்று வாய்ப்பை முதல்வரான சந்திரசேகர ராவ் பறிகொடுத்துள்ளார். தனி மாநிலம் கோரி கடந்த 2001ம் ஆண்டு போராட்டம் நடத்தியதில் தொடங்க, தெலங்கானா மாநிலம் 2014ல் உதயமாகி, கடந்த 2014 மற்றும் 2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்தது வரை தொடர் வெற்றிகளை மட்டுமே கண்டவர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்).

இவர் தனது கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்ல தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) என்று கடந்தாண்டு மாற்றி அமைத்தார். இந்நிலையில், தெலங்கானாவில் கடந்த 30ம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சியான பிஆர்எஸ் காங்கிரஸ் உடனான இருமுனை போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வரலாற்று சிறப்புமிக்க 3 முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அவர் நழுவ விட்டுள்ளார்.

ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை என்பதற்கு அப்பாற்பட்டு, இவரது ஆட்சியில் வாரிசு அரசியல், உறவினர்களுக்கு பதவி, ஊழல் போன்ற புகார்கள் எழுந்தன. இவற்றின் தாக்கமே தேர்தலில் எதிரொலித்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த தோல்வி அவரது தேசிய அரசியல் கனவை தகர்த்து விட்டதா அல்லது கலைத்து விட்டதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இது ஸ்பீடு பிரேக்கர்தான்: சந்திரசேகர ராவ் பேட்டி
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவு பிஆர்ஏஸ் கட்சிக்கு ஸ்பீடு பிரேக்கர் மட்டுமே, எதிர் கட்சியாக திறம்பட செயல்படுவோம் என கே.சி.ஆர் கூறினார்.

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஏற்று கொண்ட முதல்வர் சந்திரசேகரராவ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
கடந்த தேர்தல்களை விட தற்போது சிறந்த பெரும்பான்மை கிடைக்கும் என நம்பியிருந்தோம். ஆனால் எதிர்பார்த்த பலன் வரவில்லை. எதிர்க்கட்சியாக திறம்பட செயல்படுவோம். 100 சதவீதம் மக்களுக்காக துணை நிற்பேன். இந்த தேர்தலில் என்னுடன் நின்ற தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி. எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை பார்த்திருக்கிறோம்.

தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும் வருத்தமில்லை. இந்த தோல்வி பி.ஆர்.எஸ். கட்சிக்கு ஒரு ஸ்பீடு பிரேக்கர் மட்டுமே. நாங்கள் எதிர் கட்சியாக திறம்பட செயல்படுவோம். வெற்றி பெற்ற காங்கிரஸ்க்கு வாழ்த்துக்கள். புதிய ஆட்சிக்கு ஒத்துழைப்போம். காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post தேசிய அரசியல் கனவு தகருமா?.. 3வது முறை முதல்வராகும் வாய்ப்பை நழுவ விட்ட கேசிஆர்: வரலாற்று வாய்ப்பை இழந்தார் appeared first on Dinakaran.

Tags : KCR ,Chief Minister ,Hyderabad ,Chandrasekhara Rao ,Telangana ,Minister ,
× RELATED டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு...