×

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை தடுக்க புதிய செயலி: விரைவில் அறிமுகம்

கலசபாக்கம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட இத்திட்டத்தின் மூலம் குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 33,83,881 ஆண் தொழிலாளர்கள், 62,84,351 பெண் தொழிலாளர்கள் என 96,62,232 தொழிலாளர்கள் உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ₹293 கூலி வழங்கப்பட்டு வருகிறது. இதில் போலி அடையாள அட்டை மூலம் பல்வேறு பகுதிகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது.

முறைகேடுகளை தவிர்க்க இத்திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தினசரி வருகை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி காலை 9 மணி முதல் 11 மணிக்குள் வருகை பதிவேடு குறித்து தொழிலாளர்கள் படத்துடன் செல்போன் செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் முறைகேடுகள் தடுக்க வாய்ப்பு உள்ளது என கருதி 10 பேர் கொண்ட தொழிலாளர்களை செல்போன் மூலம் போட்டோ எடுத்து ஆப் மூலம் வருகை பதிவேடு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் இதிலும் வெளியூர்களில் இருப்பவர்களுக்கு வருகை பதிவேடு அளித்து முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

எனவே முறையாக 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்திட விரைவில் செல்போன் மூலம் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை தனித்தனியாக படம் எடுத்து தொழிலாளர்களின் ஆதார் எண்ணுடன் வருகை பதிவேடு பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆதார் அட்டையில் உள்ள படம் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளரின் படம் இரண்டும் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இணையதளத்தில் வருகை பதிவேடு பதிவேற்றம் செய்ய முடியும். புதிய செயலி மூலம் தொழிலாளர்களை தனியாக படம் எடுத்து ஆதார் எண்ணுடன் இணைத்து வருகை பதிவேட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதால் முறைகேடுகளை முற்றிலுமாக தடுக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

The post 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை தடுக்க புதிய செயலி: விரைவில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED நேரடியாக இனி வழங்கப்படாது விரைவு...