×

அங்கித் திவாரி ஆபீசில் சோதனை எதிரொலி லஞ்ச ஒழிப்புத்துறை மீது டிஜிபியிடம் திடீர் புகார்: அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மனு

சென்னை: மதுரை மண்டல அலுவலகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து லஞ்ச ஒழிப்புத்துறை சில ஆவணங்களை எடுத்து ெசன்றதாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால், தமிழ்நாடு காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அரசு மருத்துவரிடம் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.

அதில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் அத்துமீறி 35 பேர் நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஒரு வழக்கை முடிவு செய்யும் இடத்தில் இல்லாத நிலையில், முழுவதுமாக அமலாக்கத்தறை அலுவலகத்தில் சோதனையிட்டு உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் புலன் விசாரணை செய்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை நகலெடுத்தும், பல ஆவணங்களை பறிமுதல் செய்தும், எலக்ட்ரானிக் ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அடையாளப்படுத்தப்படாத 35 நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனைக்கு வரும் போது சிஆர்பிஎப் வீரர்கள் 6 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். ஆனால், அதையும் மீறி 35 பேர் உள்ளே சென்று சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் ஈடுபட்டவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினரா அல்லது தனி நபர்களா என தெரியவில்லை. எனவே அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட 35 பேர் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post அங்கித் திவாரி ஆபீசில் சோதனை எதிரொலி லஞ்ச ஒழிப்புத்துறை மீது டிஜிபியிடம் திடீர் புகார்: அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மனு appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,DGP ,Enforcement ,Manu ,Chennai ,Madurai ,assistant director ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை...