×

புயலை எதிர்கொள்ள தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் உதவியை கேட்போம்: மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: ‘மிக்ஜாம்’ புயலை எதிர்க்கொள்ள ஒன்றிய அரசின் உதவி தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பாக கேட்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மிக்ஜாம் புயலுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழை மற்றும் புயலை எதிர்க்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

இந்தநிகழ்வின் போது நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச்செயலர் சிவ்தாஸ்மீனா, வருவாய்த்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4967 இதர மையங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து வரக்கூடிய பொதுமக்களை நிவாரண நிலையங்களில் அழைத்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 225 பேர் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2.44 கோடி பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. புயலின் போது மின்கம்பங்கள், மின்கம்பிகள் மீது மரங்கள் விழ அதிக வாய்ப்புகள் உள்ள காரணத்தால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் போது, இரவு பகல் பாராமல் அனைத்து பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். அதற்காக முதலில் அவர்களுக்கு நான் என்னுடைய நன்றி். சென்னையை பொறுத்தவரை, மொத்தம் 1000 மோட்டார் பம்புகளை தயாராக வைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்கிறதோ, எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ, அங்கு பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் உதவி நிச்சயமாக கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post புயலை எதிர்கொள்ள தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் உதவியை கேட்போம்: மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Government ,CM ,M.K.Stalin ,Chennai ,Chief Minister ,Mikjam ,
× RELATED ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை...