×

நீண்ட கோடை காலம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் 10 மாதங்களில் மின் தேவை 7.5 சதவீதம் அதிகரிப்பு: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நீண்ட கோடை காலம் உள்ளிட்ட காரணங்களால் 10 மாதங்களில் மின் தேவை 7.5 % அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் சராசரியாக 16,500 மெகாவாட் முதல் 17,500 மெகாவாட் வரை மின் தேவை இருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் அதாவது கோடை காலத்தில் அதிகரிக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதகால பகுதியில் தமிழ்நாட்டின் மின் தேவை 7.5 % அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த மின் தேவையில் நான்கில் ஒரு பங்கு சென்னைக்கு மட்டுமே தேவைப்படுகிறது. சென்னையில் மின் தேவை 8 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கோடை நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டிலும், சென்னையிலும் அதிகப்படியான மின்தேவை மற்றும் மின் நுகர்வு இருந்தது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 19,387 மெகாவாட் மின் தேவை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மின் நுகர்வு 11,625 மில்லியன் யூனிட்களை தொட்டது. தமிழகத்தின் தேவையில் 7.56 % அதிகமாக பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த மின் தேவையில் 8.17% அதிகரிப்பை சென்னை மட்டுமே பதிவு செய்தது. ஜூன் மாதத்தில் அதிகபட்ச தேவையாக 4,300 மெகாவாட்டும், அதிகபட்ச நுகர்வு 2,494 மில்லியன் யூனிட் ஆகவும் இருந்தது. தமிழகத்தில் மின் நுகர்வு 6.38 சதவீதமும், சென்னையில் 7.76 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2013ம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் இந்த ஆண்டு தான் ஒரே நாளில் 4,300 மெகாவாட் உச்ச மின் தேவை இருந்தது. இது கடந்த ஆண்டின் ஒருநாள் உச்சத்தை விட 14.27 % அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச மின் தேவை. சென்னையில் மின் நுகர்வு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2013ம் ஆண்டில் 14,872 மில்லியன் யூனிட் ஆக இருந்த மின் நுகர்வு தற்போது 24,000 மில்லியன் யூனிட் ஆக உள்ளது. நீண்ட கோடை, அதிகரித்த வணிக நடவடிக்கைகள் மற்றும் அறுவடை காலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் தேவை மற்றும் நுகர்வு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நீண்ட கோடை காலம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் 10 மாதங்களில் மின் தேவை 7.5 சதவீதம் அதிகரிப்பு: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Power Board ,Chennai ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் மின் நிலையங்களில்...