சிவகங்கை, டிச.3: சிவகங்கை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் ஏராளமானோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மாணவர்களையும், இளைஞர்களையும் பெரிதளவில் பாதிக்கும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி அருகில் கடைகளில் விற்பனை செய்யப்படும் தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகள், புகையிலை மற்றும் பிற கடைகளில் விற்கப்படும் தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தினமும் புகையிலை, போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. புகையிலை விற்பனை செய்யப்படும் மற்ற கடைகள், குடோன்களை சீல் வைக்கவும், கடை, குடோன் உரிமத்தை ரத்து செய்யவும், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 50க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகளும், 400க்கும் மேற்பட்ட குட்கா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு சுமார் 70க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போலீசார் கூறியதாவது:கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகிலும், மாணவர்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் விற்பனை செய்பவர்கள் மீது மிக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்குகள் முடக்கப்படும் நடவடிக்கை, கடைகள், குடோன்கள் மூடி சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு தெரிவித்தனர்.
The post சிவகங்கை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றவர்கள் வங்கி கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.
