×

நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் 150 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி

சிலெட்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 150 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சிலெட் நகரில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 310 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 317 ரன் குவித்து ஆட்டமிழந்தது. கேன் வில்லியம்சன் சதம் விளாசினார். 7 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் 338 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஷான்டோ சதம் விளாச, முஷ்பிகுர் ரகிம் 67, மெஹிதி ஹசன் 50, மொமினுல் ஹக் 40 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் அஜாஸ் படேல் 4, ஈஷ் சோதி 2 விக்கெட் அள்ளினர்.

332 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து, 4ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன் மட்டுமே எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. டேரில் மிட்செல் 44 ரன், ஈஷ் சோதி 7 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். டேரில் மிட்செல் 58 ரன் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு கேப்டன் டிம் சவுத்தீ – ஈஷ் சோதி ஜோடி 9வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது. சவுத்தீ 34, சோதி 22 ரன்னில் வெளியேற நியூசி. 71.1 ஓவரில் 181 ரன்னுக்கு சுருண்டது. வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார் (31.1-8-75-6). 150 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் டிச.6ம் தேதி தொடங்குகிறது.

* இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிப் பட்டியலில் வங்கதேசம் 2வது இடத்துக்கு முன்னேறியது. 2வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் முதல் இடத்தில் நீடிக்கிறது.
* புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும். இந்தியா தொடர்ந்து 2 முறையும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
* நியூசி. – வங்கதேசம் இதுவரை 18 டெஸ்டில் மோதியுள்ளதில், வங்கதேசம் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக 2021/22ல் நியூசிலாந்து சென்ற வங்கதேசம் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த 18 டெஸ்டில் நியூசி. 13-2 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (3 டெஸ்ட் டிரா).
* இரு அணிகளும் மோதிய 9 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட வங்கதேசம் வென்றதில்லை. நியூசி. 7 டெஸ்ட் தொடர்களை கைப்பற்ற, 2 தொடர்கள் டிராவில் முடிந்தன.

The post நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் 150 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,New Zealand ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…