×

கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் 3வது பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள X வலைத்தள பதிவு: இந்தியாவின் மூன்றாம் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகவும் உயர்ந்துள்ள வைஷாலிக்கு எனது பாராட்டுகள். 2023ம் ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்றதன் மூலம், அத்தொடருக்குத் தகுதி பெற்ற முதல் உடன்பிறந்தவர்கள் என்ற வரலாற்றைப் படைத்தீர்கள்.

அதற்கு மேலும் மணிமகுடமாகத் தற்போது நீங்கள் கிராண்ட்மாஸ்டர் ஆகி, முதல்முறையாக உடன்பிறந்தோர் இருவர் கிராண்ட்மாஸ்டராக இருக்கும் சாதனையைப் படைத்துள்ளீர்கள். உங்கள் சாதனைகளால் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். உங்களது தனிச்சிறப்பான பயணம், செஸ் ஆர்வம் கொண்ட பலருக்கும் ஊக்கமளிப்பதாக விளங்குகிறது. நமது தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கான அடையாளமாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய செஸ் வீராங்கனைகள் கோனேரு ஹம்பி (2002, 15 வயது), துரோணவல்லி ஹரிகா (2011, 20 வயது) ஆகியோரது வரிசையில் வைஷாலி (22 வயது) 3வது கிராண்ட்மாஸ்டராகி உள்ளார். வைஷாலியின் தம்பி பிரக்ஞானந்தா 12 வயதில் (2018) கிராண்ட்மாஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியனுடன் மோதப்போவது யார் என்பதை தீர்மானிப்பதற்கான கேண்டிடேட்ஸ் தொடர் கனடாவின் டொரான்டோ நகரில் 2024 ஏப்ரலில் நடைபெற உள்ளது.

The post கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Principal ,M.K. ,Grandmaster ,Vaishali ,Stalin ,Chennai ,Tamil Nadu ,India ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி