×

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல நலத்திட்ட உதவிகள்: சங்க தலைவர் அறிக்கை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சங்க மாநில தலைவர் தங்கம் கூறியுள்ளார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவரும், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து, இந்நன்நாளில் எல்லா வளமும் பெற்று நோய்நொடியின்றி வாழ்ந்திட வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய திருநாட்டிலேயே முதன்முறையாக கலைஞரின் ஆட்சியில் தான் ஊனம் என்ற சொல்லை நீக்கியும், அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்து மகுடம் சூட்டினார். இந்நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதுடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து கொண்டும், கலைஞரின் வழியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகையை உயர்த்தி வழங்கினார். நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு வந்த திருமண உதவி தொகை, விபத்து நிவாரணம், கல்வி உதவி உள்ளிட்ட நலவாரியம் சார்பாக வழங்கப்படும் அனைத்து உதவி தொகைகளும் 2 மடங்கு உயர்த்தி வழங்கிட உத்தரவு பிறப்பித்தார்.

இதற்காக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு பெற டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்திடும் துறைத் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தேர்ச்சி பெற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால், அரசு பணிகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு பெற முடியாத நிலை உள்ளது. இதனால் அரசு பணிகளில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு துறை தேர்வுகள் எழுதுவதிலிருந்து முழு விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல நலத்திட்ட உதவிகள்: சங்க தலைவர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Disabled People's Day ,M.K.Stalin ,Union ,Chennai ,Sangh ,State President ,Thangam ,Chief Minister ,M.K.Stal ,Tamil Nadu… ,President ,Dinakaran ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு