×

பாஜக ஒன்றிய அரசு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு ED, IT-ஐ பயன்படுத்துகிறது: அமலாக்கத்துறையின் பணம் பறிக்கும் செயலுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: பாஜக ஒன்றிய அரசு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு ED, IT-ஐ பயன்படுத்துகிறது; அமலாக்கத்துறையின் பணம் பறிக்கும் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியதாவது, அண்மை சில மாதங்களாக அமலாக்கத்துறை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று (01.12.2023) திண்டுக்கல் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரி, மருத்துவர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த குற்றச் செயலில் ஈடுபட்டு, தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அரசியலமைப்பு சட்டப்படி தற்சார்பு அதிகாரம் கொண்ட அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புள்ளியியல் துறை, மத்திய புலானாய்வுத் துறை, கணக்கு மற்றும் தணிக்கை துறை, தேர்தல் ஆணையம், ஆளுநர் மாளிகைகள் உள்ளிட்ட அமைப்புகளை பாஜக ஒன்றிய அரசு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்ற மாதம் ராஜஸ்தானில், சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்த்து விடுவதாக ஒருவரை மிரட்டி ரூ.17 லட்சம் பணம் பறித்த அமலாக்கத்துறை அலுவலர் நாவல் கிஷோர் உட்பட இரண்டு நபர்களை ராஜஸ்தான் மாநில அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (01.12.2023) திண்டுக்கல் அருகே, அமலாக்கத்துறை வழக்கில் விடுதலை பெற்றிருக்கும் மருத்துவர் ஒருவரை மிரட்டி ரு.3 கோடி பணம் கேட்டதும், ரூ.51 லட்சம் பெற ஒப்புக் கொண்டு, அதன் இரண்டாவது தவணைத் தொகையை அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி வாங்கி சென்ற போது தமிழ்நாடு அரசின் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை காவல்துறையால் கையும், களவுமாக பிடிபட்டுள்ளனர். நாடு முழுவதும் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் பறிப்பது, எதிர்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை மறுப்பது, பொது வாழ்வில் உள்ளவர்கள் மீது வழக்குகள் போட்டு, அவர்களது செயல்பாடுகளை முடக்குவது என அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பாஜக ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜக ஒன்றிய அரசு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு ED, IT-ஐ பயன்படுத்துகிறது: அமலாக்கத்துறையின் பணம் பறிக்கும் செயலுக்கு முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP union govt ,Mutharasan ,CHENNAI ,BJP union government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு...