×

மதுரையில் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகள் துவங்கியது: நெரிசலுக்கு விரைவில் தீர்வு ; பணிகளை வேகப்படுத்த உத்தரவு

மதுரை: மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி அம்மன் கோயில், ரயில்வே நிலையம், பெரியார் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. வைகை ஆற்றின் வடபுறம் அரசு மருத்துமனை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாட்டுத்தாவணி- எம்.ஜி.ஆர் பஸ் நிலையம், மதுரை மாநகராட்சி அலுவலகம், போலீஸ் கமிஷனர், எஸ்பி அலுவலகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளை இணைத்து பயணிக்கும் வகையிலான கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ளூர், வெளியூர் வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இப்பகுதி நெரிசலை போக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதன்படி இந்த கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கான கட்டுமான பணிகளை, மதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்.30ல் துவங்கி வைத்தார். 61 தூண்களுடன் மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் அமையவுள்ளது. இப்பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு அருகில் இணையாக புதிதாக கட்டப்படும் பாலம் வழியாக 1.300 கி.மீ நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்துடன் ஒருதிசை வழித்தட மேம்பாலமாக சென்று நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்படவுள்ளது.

கோரிப்பாளையம் சந்திப்பில் பாலத்திலிருந்து செல்லூர் நோக்கி செல்ல கூடுதலாக 700 மீட்டர் நீளத்திற்கு இறங்குதளம் 8.50 மீட்டர் அகலத்துடன் அமையவுள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கப்படுவதுடன், பாதசாரிகள் நடந்து செல்ல நடைமேடையுடன் கூடிய மழைநீர் வடிகால், பேருந்து நிறுத்த வசதிகள் ஆகியன அமைக்கப்படவுள்ளன. மேலும், பீபீ குளம்- காந்தி மியூசியம் சாலை சந்திப்பில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஒரு வாகன சுரங்கப்பாதை (வெகிக்கிள் அன்டர்பாஸ்) அமைக்கபடவுள்ளது, கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அதற்கு விடை அளிக்கும் விதமாக மாநகரின் பழமை வாய்ந்த ஏவி மேம்பாலம் அருகே தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இப்பணிகளை துவக்கி, அடுத்தடுத்த நாட்களில் வேலைகளை விரைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டப்பட உள்ள இந்த பாலத்தின் பெருவாரியான பணிகள், மதுரை நகரின் முக்கிய சாலைகள் அடங்கி இருப்பதால் போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மதுரை தமுக்கம் பகுதியிலும் விரைவில் தூண்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மதுரையில் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகள் துவங்கியது: நெரிசலுக்கு விரைவில் தீர்வு ; பணிகளை வேகப்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Koripalayam ,Madurai ,Chief Minister ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED அனைத்து தெய்வங்களையும் ஆட்கொண்டருளும் ஆப்புடையார்