×
Saravana Stores

ரூ.10 கோடி மதிப்பீட்டில் மதுரையில் பழமை மாறாது புதுப்பிக்கப்படும் மகால்: மாநில நிதி ரூ.3 கோடியில் பாலீஷ் இல்லாத கல்தளம்

மதுரை: மதுரையின் மகத்தான அழகு அடையாள பெருமைக்குரிய திருமலை நாயக்கர் மகால் ரூ.10 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் மாநில அரசு திட்ட நிதி ரூ.3 கோடியில் தரைப்பகுதி மட்டுமே பழங்காலத்தை போலவே 80 ஆயிரம் சதுர அடிக்கு பாலீஷ் செய்யப்படாத கல்தளம் பதிக்கப்படுகிறது. மதுரையின் முன் வரிசையில் முகம் நீட்டி நிற்கும் அடையாள பெருமைக்குரிய முக்கிய இடத்தில் ஒன்றாக திருமலை நாயக்கர் மகால் இருக்கிறது. தென்னகத்தின் கலாச்சார அடையாளமான இந்த கலைப்பொக்கிஷம் ‘இந்தோ செராசனிக்’ எனும் முகலாய, இந்து, இத்தாலிய கட்டடிட கலைகளில் மிளிர்கிறது.

மதுரையை 1627 முதல் 1659 வரை ஆண்ட திருமலை மன்னர் இந்த எழில்மிகு அரண்மனையை அழகு மகாலாக நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அருகில் இருந்து, பார்த்து பார்த்து ரசனை பொங்க 1639ல் கட்டி முடித்தார். அவர் இறுதி காலமான தனது 75 வயது வரை மனைவியருடன் இங்குதான் வாழ்ந்தார். வடமண்ணில் தாஜ்மகால் எழுந்த அதே காலத்தில், தென்புறம் எழுப்பப்பட்ட அழகு மகால் இது ஒன்றுதான். இக்கட்டுமானம் கலை வல்லுநர்களை வியப்பில் விழ வைக்கிறது. மகாலுக்குள் சிறிதும், பெரிதுமாக 248 நெடிய தூண்கள் இருக்கின்றன. 15 அடி சுற்றளவுடன் 4.5 மீட்டர் மற்றும் 9.5 மீட்டர் உயரங்கள் கொண்ட இத்தூண்கள் ஒன்றன் மீது ஒன்றாய் முழு, அரை வட்ட மலைக்கற்களை அடுக்கி வைத்து எந்த சாந்து இணைப்பும் இன்றி கட்டப்பட்டிருக்கிறது. மகால் பகுதி பரந்து இருந்திருக்கிறது.

தரைத்தளத்தில் செதுக்கப்பட்ட மலைக்கற்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘அரைத்த சுண்ணாம்பில் வெல்லச்சாறு, கடுக்காய், ஆமலகம், தான்தோன்றிக்காய் ஆகியவற்றின் சாறு விட்டு, எக்காலத்திலும் அசையாத வச்சிரம் போன்று காரை வைத்து’ இம்மகால் கட்டப்பட்டதை பழம் பாடலால் அறிய முடிகிறது. இப்படி பழமை மாறாமல் மகால் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை நாயக்கர் மகால் ரூ.10 கோடி செலவில் தற்போதும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மகாலில் நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒன்றிய, மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களின் கீழ் ரூ.10 கோடியில் அரண்மனையின் தரைத்தளம், நாடக சாலை, பள்ளி அறை, தூண்கள் போன்றவை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு உள்ளிட்ட பூச்சு பொருட்களின் கலவையை சில வாரங்கள் காய வைத்து தயாரித்து புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நாடக சாலை பகுதி முழுமையாக சீரமைக்கப்படுகிறது. சிற்ப வளாகம் அமைத்தல், முன்புறம் தீமேட்டிக் மியூசியம் எனும் தொல்லியல் துறையின் வரலாற்று மாணவர்களுக்கான கல்வெட்டு வெளியீடுகள் கொண்ட படிப்பகம் அமைத்தல் என பணிகள் நடக்கிறது.

இந்த ரூ.10 கோடி நிதியில் ரூ.3 கோடி நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி மூலம் மகால் தரையில் 80 ஆயிரம் சதுர அடிக்கு ஒரே மாதிரி தரைப்பகுதி அமைக்கப்படுகிறது. பாரம்பரிய முறைப்படியாக கல்தளமாக பழைய போட்டோக்களில் உள்ளதை போல் பாலீஷ் செய்யப்படாத மலைக்கற்களை கொண்டு இந்த தரைத்தளம் அமைகிறது. தர்மபுரி மாவட்டம் தேன்கணிக்கோட்டையில் இருந்து இந்த பழந்தன்மை மாறாத கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடக்கிறது. மாநில அரசு நிதியிலான இப்பணிகள் வரும் மார்ச்சிற்குள் நிறைவடையும். இவ்வாறு கூறினார்.

* மிச்சப்பட்டது கொஞ்சம் தான்…
இன்றைக்கு இருப்பதை போல் நான்கு மடங்கிற்கு அன்று அரண்மனை இருந்தது. திருமலை நாயக்கர் இருந்த சொர்க்கவிலாசம், இவரது தம்பி முத்தியாலு நாயக்கர் இருந்த ரங்கவிலாசம் என்பதோடு நாடக சாலை, ஆயுத சாலை, இரு அறைகளுடன் அந்தப்புரம், ராஜராஜேஸ்வரி கோயில், பூஜை அறை, சுற்றுமதில், நுழைவுவாசல் என அநேக இடங்கள் இருந்தன. இன்றைய மஞ்சணக்கார தெருவிற்கு கிழக்கே, தெற்கு மாசி வீதிக்கு தெற்கே, தெற்குவெளி வீதிக்கு வடக்கே, கீழவெளிவீதிக்கு மேற்கே என ஒரு சாம்ராஜ்யமாய் இந்த மகால் நிமிர்ந்து நின்றது.

இன்று ரங்கவிலாசம், இங்கிருந்த கோயில், ஆயுத சாலை, அந்தப்புரத்தின் ஒரு அறை, நுழைவுவாயில், வசந்தவாவி குளம், பூங்கா, வீரர்கள் மோதும் விளையாட்டிடம், ஊழியர் குடியிருப்பு என பல இடங்கள் முழுமையாய் அழிந்து போயின. எஞ்சிய மகால் 5 ஏக்கர் பரப்பில் 9 ஆயிரம் சதுர அடி கட்டடங்களாக மட்டுமே இன்றிருக்கிறது. ஆங்கில அரசு 1921ல் இம்மகாலையும், எஞ்சிய பகுதியான பத்துத்தூணையும் நினைவு சின்னமாக அறிவித்து ஆணை பிறப்பித்தது. அச்சுக்கூடமாக, நெசவுப்பட்டறையாக, மாவட்ட நிர்வாக அலுவலகங்களாக, நீதிமன்றங்களாக அன்றைய காலத்திற்கு ஒரு கோலம் கொண்ட இம்மகாலை, தமிழக தொல்லியல் துறை 1971ல் ஏற்றது. ஒரு பழமை கட்டிடமாக மட்டுமல்லாது காலம்தோறும் காக்க வேண்டிய கலைக்கூடமாக காட்சி தருகிறது.

The post ரூ.10 கோடி மதிப்பீட்டில் மதுரையில் பழமை மாறாது புதுப்பிக்கப்படும் மகால்: மாநில நிதி ரூ.3 கோடியில் பாலீஷ் இல்லாத கல்தளம் appeared first on Dinakaran.

Tags : Mahal ,Madurai ,Tirumala ,Nayakkar Mahal ,
× RELATED வீடு முன்பு நின்ற பெண்ணை தரதரவென 100 அடி...