×

மத்தூர் அருகே விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகள் திருட்டு: கிராம மக்கள் அச்சம்

போச்சம்பள்ளி: மத்தூர் அருகே விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு-மாடுகள் மற்றும் மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அந்தேரிப்பட்டி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தையே நம்பியுள்ள இவர்கள், ஆடு-மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இரவு நேரங்களில் அங்குள்ள கொட்டாய்களில் கால்நடைகளை கட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில், சில மாதங்களாக, மர்ம நபர்கள் தோட்டங்களுக்குள் புகுந்து கால்நடைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் வீரபத்திரன் என்பவரது கொட்டாயில் கட்டி வைத்திருந்த 2 கறவை மாடுகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மகளிர் சங்கத்தில் கடன் பெற்று வாங்கிய மாடுகளை திருடிச் சென்றதால், அந்த குடும்பமே வருவாயின்றி தவித்து வருகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், புருசோத்தமன், சரவணன், இன்பராஜ், ராமச்சந்திரன், ஞானசேகரன் மற்றும் குமார் உள்ளிட்டோரின் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், விவசாய கிணற்றில் உள்ள மின் வயர்களை ஒரே நாளில் திருடிச் சென்றுள்ளனர். ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் சுமார் 60 மீட்டர் வயர்கள் திருடப்பட்டதால், மின் மோட்டாரை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். புதிய வயர்கள் வாங்க சுமார் ₹5 ஆயிரம் முதல் ₹10 ஆயிரம் வரை செலவாகும் என தெரிவிக்கின்றனர். எனவே, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்தீபனிடம் கேட்ட போது, புகார் கிடைக்கப் பெற்றுள்ளது. விசாரித்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

The post மத்தூர் அருகே விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகள் திருட்டு: கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Mathur ,Dinakaran ,
× RELATED சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர்...