×

திருவாடானை பகுதிகளில் பழமை வாய்ந்த வழிபாட்டு ஸ்தலங்கள் சுற்றுலாத்தலங்கள் ஆக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுகா மிகவும் தொன்மை வாய்ந்த கிராமங்களை கொண்டதாக உள்ளது. அதற்கு ஆதாரமாக ஏராளமான கல்வெட்டுக்களும், பழமை வாய்ந்த கோயில்களும் இங்கு நிறைய உள்ளன. திருவாடானையில் 1000 ஆண்டுகள் பழமையான ஆதிரத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. 9 நிலைகளைக் கொண்ட பெரிய ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோயில் பாண்டிய ஸ்தலம் 14ல் எட்டாவது சிவ தலமாகும். இதேபோன்று அருகிலுள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என மதங்கள் கடந்து நேர்த்திக்கடன் வைத்து அது நிறைவேறியவுடன் வந்து சாமி தரிசனம் செய்துவரும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்களும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதேபோல் திருவாடானை அருகே ஓரியூரில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மத போதகராக இருந்து ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் உத்தரவால் தலை வெட்டுண்டு உயிர் தியாகம் செய்த புனித அருளானந்தரின் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த புனித தலத்திற்கு சில கிலோ மீட்டர் தொலைவில் பல நூற்றாண்டைக் கடந்த அனைத்து மத மக்களும் வழிபடும் இடமாக இஸ்லாமியர்களின் முக்கிய ஸ்தலமாக சர்தார் நெய்னா முகமது தர்கா பாசி பட்டினத்தில் உள்ளது. தர்காவின் கந்தூரி விழாவில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் பங்களிப்பு இன்றளவும் உள்ளது.

இந்த பகுதி வழியாக ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் தனிப்பட்ட முறையில், தங்களுக்கு செவி வழியில் கிடைத்த தகவலின்பேரில் இந்தப் புனித ஸ்தலங்களுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் அரசு இந்த புனித தலங்களை ஒருங்கிணைத்து சிறப்பு நிதியை கொண்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இப்பகுதிகளில் வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படும் எனவும் இப்பகுதி வர்த்தகர்களும், பொதுமக்களும் அரசை எதிர்பார்க்கின்றனர். திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என மதங்கள் கடந்து நேர்த்திக்கடன் வைத்து அது நிறைவேறியவுடன் வந்து சாமி தரிசனம் செய்துவரும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.

The post திருவாடானை பகுதிகளில் பழமை வாய்ந்த வழிபாட்டு ஸ்தலங்கள் சுற்றுலாத்தலங்கள் ஆக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadan ,Thiruvadanai ,Ramanathapuram ,
× RELATED திருவாடானையில் வாரச்சந்தை பகுதியில் பேவர்பிளாக் அமைப்பு