×

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல முன்னேற்பாடு: மின் விநியோகத்தை இன்று நிறுத்தி வைத்து மின்வாரியம் நடவடிக்கை

கூடங்குளம்: தினகரன் செய்தி எதிரொலி காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல முன்னேற்பாடுகளை மின்வாரியம் துவக்கியுள்ளது. இதற்காக மின் விநியோகத்தை இன்று நிறுத்தி வைத்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் மூலம் 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மூன்று மற்றும் நான்காவது அணு உலை அமைக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு மூன்று மற்றும் நான்காவது அணு உலைக்கான முக்கிய தளவாடப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடந்த 4ம் தேதி சாலை மார்க்கமாக 5 கனரக லாரிகளில் நெல்லை வழியாக தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு வரப்பட்டது. இந்த லாரிகள் கடந்த 15ம் தேதி நெல்லை மாவட்டம் விஸ்வநாதபுரம் விலக்கிற்கு வந்தது. அங்கிருந்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்துக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது.

ஆனால் இப்பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு உயர்மின் வட கம்பிகள் சாலையின் குறுக்கே செல்வதால் மின் தடை ஏற்படுத்தி பிறகே லாரிகள் சாலையை கடந்து செல்ல முடியும் சூழல் உள்ளது. இதற்காக மின்வாரிய அதிகாரிகளை அணுகி தகவல் தெரிவித்த பிறகும் மின்வாரிய அதிகாரிகள் லாரிகள் செல்ல அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக நெடுஞ்சாலையிலேயே தளவாட பொருட்களுடன் கனரக லாரிகள் காத்துக்கிடந்தது. இதனால் அணு உலையில் பணிகள் தடைபடும் சூழல் உருவாகி உள்ளது. இது தொ டர்பாக தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.

இதை தொடர்ந்து அணுமின் நிலையத்துக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடுகளை மின்வாரியம் துவக்கியுள்ளது. இதுதொடர்பாக வள்ளியூர் மின்வாரிய செயற் பொறியாளர் (விநியோகம்) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு தளவாட பொருட்கள் ஏற்றிக் கொண்டு 5 கனரக வாகனங்கள் குமாரபுரம் சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பழவூரில் இருந்து விஸ்வநாதபுரம் விலக்கு வழியாக கூடன்குளம் வரை சாலையின் குறுக்கே செல்லும் உயர்மின் அழுத்த பாதைகளை அகற்றி கனரக வாகனங்களை நகர்த்துவதற்கு ஏற்பாடு செய்யும்படி கடந்த 20ம் தேதி அன்று கடிதம் பெறப்பட்டது.

அதன் அடிப்படையில இடங்களை ஆய்வு செய்தபோது 3 உயரம் கூடிய கனரக வாகனங்களும் 2 கனரக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பழவூர் காவல்நிலையத்தில் இருந்து உரிய அனுமதி பெற்று கடந்த 27ம் தேதி அன்று கனரக வாகனங்கள் குமாரபுரத்திலிருந்து லெவிஞ்சிபுரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. உயரம் குறைந்த 2 கனரக வாகனங்களையும் கூடன்குளம் வரை கொண்டு செல்வதற்கு உயர் மின் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பிகளை அகற்றாமல் மின்தடை மட்டும் செய்தால் போதுமானதாக இருந்ததால் 27ம் தேதி அன்றே 2 கனரக வாகனங்களையும் கூடன்குளம் அணுமின் நிலையம் வரை கொண்டு சேர்க்கப்பட்டது.

மீதமுள்ள 3 உயரம் கூடிய கனரக வாகனங்களை லெவிஞ்சிபுரத்திலிருந்து கூடன்குளம் வரை கொண்டு செல்வதற்கு 8 இடங்களில் உயரழுத்த மின் பாதைகளையும் 37 இடங்களில் தாழ்வழுத்த மின் பாதைகளையும் 45 வீட்டு மின் இணைப்புக்கான சர்வீஸ் வயர்களையும் அகற்றிதான் கனரக வாகனங்களை கொண்டு செல்ல முடியும். சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளை அகற்ற சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பழவூர் மற்றும் கூடன்குளம் காவல்நிலையங்களுக்கு பாதுகாப்பு வேண்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (2ம் தேதி) பணிகள் செய்ய போலீசார் அனுமதி அளித்துள்ளார்கள். அதன்படி விஸ்வநாதபுரம் விலக்கிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையம் வரை உள்ள ஊர்களான கன்னங்குளம், கூட்டப்புளி, செட்டிகுளம், பெருமணல், ஸ்ரீரங்க நாராயணபுரம், பொன்னார் குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (டிச.2ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல முன்னேற்பாடு: மின் விநியோகத்தை இன்று நிறுத்தி வைத்து மின்வாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kudankulam Nuclear Power Plant ,Board ,Kudankulam ,Dinakaran ,Power Board ,
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வு ரத்து