×

800 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் அணை குறித்த விழிப்புணர்வு

 

ஈரோடு, டிச.2: பவானி, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள 75 பழம்பெரும் நீர் பாரம்பரிய கட்டமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டமைப்புகளை பற்றிய சரித்திர சிறப்பையும், அதன் பின் உள்ள அறிவியலையும், நெடுங்காலமாக அந்த நீர் நிலைகள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய செய்திகளையும், பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல மாநில நிர்வாகங்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன் மூலம் ஏற்படும் விழிப்புணர்வின் காரணமாக மக்களிடையே நீர் நிலைகளின் பாதுகாப்பின் முக்கியத்துவமும், பாரம்பரியத்தின் பெருமையும், சுற்றுலாவும் மேம்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ், ஐந்து பாரம்பரிய மிக்க நீர் கட்டுமான பகுதிகளாக, 2000 ஆண்டுகள் பழைமையான கல்லணை, 1000 ஆண்டுகள் பழைமையான வீராணம் ஏரி, 800 ஆண்டுகள் பழைமையான காலிங்கராயன் கால்வாய், 150 ஆண்டுகள் பழைமையான பக்கிங்காம் கால்வாய், தஞ்சையின் அணைக்கரை பகுதியில் உள்ள 120 ஆண்டுகள் பழைமையான கீழணை பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழைமையான காலிங்கராயன் கால்வாய் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நேரில் அழைத்து வரப்பட்டு காலிங்கராயன் வாய்க்கால் வெட்டப்பட்ட விதம், அணைக்கட்டு, தண்ணீர் செல்லும் வழித்தடம், பாசன பரப்பளவு, கசிவு நீர் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

The post 800 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் அணை குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kalingarayan Dam ,Erode ,Bhavani, Kalingarayan dam ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் சொத்து வரி பாக்கி...