×

இரவு பகலற்ற ஒளியாக அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகள் தமிழ் சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட அயோத்திதாச பண்டிதரின் உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த பின்னர், காணொலி மூலமாக பேசியதாவது: தமிழ்நாட்டினுடைய அறிவியக்கத்தின் மாபெரும் பேரொளியாக திகழ்ந்த அயோத்திதாச பண்டிதருக்கு திராவிட மாடல் அரசு மணிமண்டபம் அமைத்துச் சிறப்பு செய்கிறது. இது அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாச பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில், சென்னையில், அவருடைய உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021ம் செப்.3ம் தேதி அறிவித்தேன்.

அந்தவகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதருடைய உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் எழில்மிகு தோற்றத்தோடு ‘அறிவொளி இல்லமாக’ அமைக்கப்பட்டிருக்கிறது. அறிவுலக பேரொளியான அவருடைய மணிமண்டபத்தை திறந்து வைக்கின்ற வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், தமிழ்நாட்டு அரசியலில் தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அடையாள சொல்லாக மாற்றியவர் அயோத்திதாச பண்டிதர். தமிழ் அல்லது திராவிடம் என்பது மொழி மட்டுமல்ல, அதை ஒரு பண்பாட்டு நடைமுறையாக பார்த்தவர் அயோத்திதாசர்.

கடந்த 1881ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘பூர்வத் தமிழர்’ என்று பதிய சொன்னவர் அயோத்திதாசர். அதேபோல், கடந்த 1891ம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘திராவிட மகாஜன சபை’. 1907ம் ஆண்டு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழை தொடங்கி, அதையே ’தமிழன்’ என்ற இதழாக நடத்தி வந்தார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து தமிழர்களாக, சாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய வேண்டும் என்று இறுதி வரை எழுதியவர், பேசியவர், போராடியவர் அயோத்திதாசர்.

எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி என பன்முக ஆற்றல் கொண்டவராக செயல்பட்ட அயோத்திதாசர், தான் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவொளி பரப்பியவர். அதேபோல், இவர் அமைத்துக் கொடுத்த அறிவுத் தளத்தில்தான் 150 ஆண்டுகால தமிழர் அறிவியக்கம் செயல்பட்டு வருகிறது. “என் பகுத்தறிவு பிரசாரத்துக்கும், சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்தான்’’ என்று ‘பகுத்தறிவுப் பகவலன்’ பெரியார் சொன்னார்.

இவருடைய பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் உலக அளவில் வாசகர்கள் உருவானார்கள். மேலும், “இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும் மதமுமே தடை” என்று சொன்ன அயோத்திதாசர், “மனிதர்களை, மனிதர்களாக பார்க்கும் எவரோ, அவர்தான் மனிதர்” என்று முழங்கினார். அவருடைய நூல்கள் இன்றைக்கும் அறிவொளி ஊட்டுவதாக இருக்கிறது. கடந்த 1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசருடைய 175வது ஆண்டு விழாவின் நினைவாகவும், அவருடைய அறிவை வணங்குகின்ற விதமாகவும் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமின்றி, ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த, “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’’ வரும் ஐந்தாண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது. மகான் புத்தரை ‘இரவு பகலற்ற ஒளி’ என்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதருடைய சிந்தனைகளும், இரவு பகலற்ற ஒளியாக இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு பயன்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்
‘திராவிட பேரொளி’ அயோத்திதாச பண்டிதர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்ததையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழன் – திராவிடன் ஆகிய இரண்டையும் அரசியல் களத்தில் அடையாள சொற்களாக மாற்றிய ‘திராவிட பேரொளி’ அயோத்திதாச பண்டிதர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.

அயோத்திதாசரின் நூல்கள் நாட்டுடைமை, ரூ.10 லட்சம் பரிவுத்தொகை வழங்கல், அயோத்திதாசர் அஞ்சல் தலை வெளியீடு, அவர் நடத்திய தமிழன் இதழுக்கு நூற்றாண்டு விழா, அவர் பெயரிலான சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு நிலம் ஆகியவற்றை நிறைவேற்றியது திமுக ஆட்சியே. ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’ வரும் ஐந்தாண்டுகளில் ரூ.1,000 கோடி செலவில் நமது திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. புத்தரை ‘இரவு பகலற்ற ஒளி’ என போற்றிய பண்டிதரின் சிந்தனைகளும் அத்தகைய ஒளியாக தமிழ் சமுதாயத்துக்கு பயன்படட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இரவு பகலற்ற ஒளியாக அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகள் தமிழ் சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Pandit Ayodhitada ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Ayodhitada Pandithar ,Gandhi Mandapa complex ,Guindy, Chennai ,Ayodhitadas Pandithar ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...