×

5 மாநில தேர்தல் மிசோரம் ஓட்டு எண்ணிக்கை டிச.4ம் தேதி தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மிசோரம் மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் 87 சதவீதம் பேர் கிறிஸ்தவ மக்கள். அங்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை முதலில் தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி டிச.3ம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு எழுந்ததால் நேற்று திடீரென மிசோரம் மாநில ஓட்டுஎண்ணிக்கையை மட்டும் ஒருநாள் அதாவது டிச.4ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிசம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் ஓட்டு எண்ணும் தேதியை மாற்றக் கோரி பல்வேறு தரப்பிலிருந்து மனுக்களை ஆணையம் பெற்றுள்ளது. இந்த மனுக்களை கருத்தில் கொண்டு, மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் தேதியை டிசம்பர் 3ம் தேதியில் இருந்து டிசம்பர் 4ம் தேதிக்கு (திங்கட்கிழமை) மாற்ற ஆணையம் முடிவு செய்துள்ளது. மற்ற 4 மாநிலங்களின் ஓட்டு எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த மாநிலங்களில் திட்டமிட்டபடி டிச.3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 5 மாநில தேர்தல் மிசோரம் ஓட்டு எண்ணிக்கை டிச.4ம் தேதி தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Commission ,New Delhi ,Election Commission ,Mizoram ,Chhattisgarh ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால்...