×

பொருளாதார வளர்ச்சியில் 2027ம் ஆண்டு இந்தியா 3ம் இடம் பிடிப்பதே இலக்கு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

சென்னை: நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில், மாநில அளவிலான 2 நாள் இளைஞர் கலைவிழா மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி அரங்கத்தில் நேற்று தொடங்கியது. விழாவிற்கு நேரு யுவகேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் குன் அமீது, சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் கூடுதல் இயக்குநர் அண்ணாதுரை, துணை இயக்குநர் அதுல் கே.ரெஸ்டோகி, ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த வசந்தி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்து, கலை கண்காட்சியை பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமரின் முக்கிய நோக்கம் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014க்கு முன் 450 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் இருந்தன. தற்போது, 1.20 லட்சம் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தி உற்பத்தி செய்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தில் இருக்கிறோம். வரும் 2027ம் ஆண்டு 3ம் இடம் பிடிப்பது நமது இலக்காகும். ஒன்றிய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், 220 ‘மோடி உத்தரவாத வாகனம்’ ஜனவரி 26ம் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஜெயின் கல்லூரி செயலாளர் யுதன் குமார் சோர்டியா, கல்லூரி முதல்வர் வெங்கடரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொருளாதார வளர்ச்சியில் 2027ம் ஆண்டு இந்தியா 3ம் இடம் பிடிப்பதே இலக்கு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Union Minister ,L. Murugan ,Chennai ,Nehru Yuvakendra Organization ,Meenambakkam A.M. Jain College ,
× RELATED தலைமை உத்தரவிட்டால் மக்களவை...