×

ஜெகன்நாதன் அருளால் ஜகத்தையே வெல்லலாம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ராய சிங்கன், அங்க பூபதி என்ற இருவரும் ராஜகுமாரர்கள், சகோதரர்களும் ஆவார்கள். அண்ணன் ராய சிங்கன், அற்புதமாக தனது நாட்டை ஆட்சி புரிந்தபடி இருந்தார். அங்க பூபதியின் மனைவி, பரம பதி விரதை. திருமால் திருவடியின் மீது அபார பக்தி கொண்டவள். ஒரு நாள், இவர்களது இல்லத்திற்கு ஒரு வைணவ பெரியவர் விஜயம் செய்ய இருந்தார். அதனால், வீட்டில் தட புடலாக ஏற்பாடு செய்திருந்தாள், அங்க பூபதியின் மனைவி. அதை கண்ட அங்க பூபதிக்கு கோபம் வந்தது.

‘‘கற்புடைய பெண்களுக்கு கணவன் தானே தெய்வம். அப்படி இருக்க, யார் இது புது தெய்வம்? அந்த தெய்வத்தை வழிபடுகின்றவர் வருகிறார் என்பதற்கு வீட்டையே திருவிழா கோலம் பூன வைத்துவிட்டாயே’’ என்று கேட்டு அவளை சினந்தான், கணவன். கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று விளங்காமல், திருமாலையே சரணாகதி செய்து, உண்ணாமல் உறங்காமல் கவலையில், கிடந்தாள் அந்த புண்ணியவதி. இப்படியே மூன்று நாள் சென்றுவிட்டது. தனது பக்தையின் உடல் நலிந்து வருவதை கண்டு, பொறாத திருமால், அங்க பூபதியின் கனவில் தோன்றினார்.

‘‘உன் மனைவிக்கு மட்டுமில்லை, உனக்கும் இந்த உலகம் முழுவதற்கும் நான்தான் இறைவன். நான்தான் நாதன். ஜெகன் நாதன்’’ என்று சொல்லி மறைந்தார். கனவில் கண்ட அற்புத காட்சியால் திடுக்கிட்டு எழுந்தான் அங்க பூபதி. நேரிடையாக ஓடிச் சென்று தனது மனைவியின் பாதம் தொட்டு வணங்கி, மன்னிப்பு கேட்டான். அன்று தொடங்கி மனைவியும் அவனுமாக சேர்ந்து திருமாலுக்கு அடிமை செய்து வந்தார்கள்.

இதற்கிடையில் அண்ணன் ராயா சிங்கன், தேசத்தை எதிர்த்து போர் தொடுத்து வரும் பகைவரை வென்று வர அங்க பூபதியை அனுப்பினான். அங்க பூபதி போரில் தனது வீரத்தை காட்டி, பகைவனை ஓட ஓட விரட்டினான். அந்தப் போரில் பகைவனை வென்று, அவனது பொருளை கவர்ந்து வரும் பொது, ஒரு பெரிய வைரம் அங்க பூபதிக்கு கிடைத்தது. அங்க பூபதி, அந்த வைரம் பூரி ஜெகன் நாதனுக்குதான் சொந்தம் என மனதால் சமர்ப்பணம் செய்தான்.

வைரத்தை பற்றி, மந்திரி களின் மூலம் அறிந்த ராய சிம்மன், பல வழிகளில் அதை கைப்பற்ற பார்த்தான். ஆனால், ஜெகன்நாதனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்ட படியால் அதை தர அங்கபூபதி மறுத்தான். இதனால், அவன் மேல் கடும் சினம் கொண்டான் ராய சிம்மன்.

அந்த வைரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையால், விஷம் கலந்த உணவை தனது தங்கையிடம் கொடுத்து, அங்கபூபதிக்கு கொடுக்கும் படி பணித்தான் ராய சிம்மன். அண்ணன் மீது இருந்த பயத்தாலும், மன்னனாக இருக்கும் அண்ணன் தண்டனை தந்துவிடுவானே என்ற பயத்தாலும், தங்கை விஷம் கலந்த உணவை தனது மற்றொரு அண்ணனான அங்கபூபதிக்கு பரிமாறினாள். அங்கபூபதியும் பரிமாறபட்ட உணவை மனதால், பூரிஜெகன்நாதருக்கு நிவேதனம் செய்தான்.

பிறகு, அதை எடுத்து உண்ண வாயின் அருகே எடுத்துச் சென்றான். அப்போது கேயூரமும், நானா வித ரத்தினங்களும் பதிக்கப் பட்ட வளைகளை அணிந்த கருநீல நிற கை ஒன்று ஆகாசத்தில் இருந்து தோன்றி, உண்ணவிடாமல், அங்கபூபதியின் கையை பிடித்தது. அது அந்த திருமாலின் திருக்கை என அறிந்த அங்கபூபதி அதை பய பக்தியோடு வணங்கினான்.

‘இதை உண்ணாதே.. இது விஷம் கலந்த உணவு’’ என்று திருமாலின் திருக்குரல் ஆகாயத்தில் இருந்து அசரீரியாக ஒலித்து. ஆனாலும், இறைவனுக்கு படைத்த உணவு, ஆகவே இதை தூக்கி ஏறிய மாட்டேன் என்ற உறுதியோடு, அதை உண்டான் அங்கபூபதி. அவனது உறுதியின் முன்பும், பக்தியின் முன்பும், விஷம் செயலிழந்து போனது. இனி இங்கிருந்தால் சரி வராது என முடிவு செய்த அங்கபூபதி, அங்கிருந்து புறப்பட்டு தனது மனைவியுடன், பூரி ஜெகன் நாதர் கோயிலை நோக்கி கிளம்பினான். இதை அறிந்த மன்னன் ராய சிம்மன், தனது அமைச்சனை அனுப்பி, வைரத்தை கைப்பற்றி வரச் சொன்னான்.

அமைச்சர், அங்கபூபதியை சுற்றிவளைத்து, வைரத்தை கொடுத்துவிடும் படி மிரட்டினான். ஆனால், நெஞ்சுரம் மிக்க அங்கபூபதி, இந்த வைரம் ஜெகன் நாதனுக்கு உரியது என்று சொல்லி,
அங்கிருந்த ஆற்றில் அதை வீசிவிட்டான். அதை கண்ட அமைச்சரின் கண்கள் கோபத்தால் சிவந்தது. தனது வீரர்களை இறங்கி ஆற்றில் அந்த வைரத்தை தேட சொல்லி ஆணையிட்டான். ஆனால், அமைச்சரும் அவரது வீரர்களும் எவ்வளவு தேடியும் வைரம் கிடைக்கவே இல்லை. இதைக் கண்டு அங்கபூபதி சிரித்தார். அவரது சிரிப்பு அமைச்சரையும் வீரர்களையும் கடுப்பேற்றியது. வாளை எடுத்துச் சென்று அங்கபூபதியின் கழுத்தில் வைத்த அமைச்சர், ‘‘எதற்கு சிரிக்கிறாய்’’ என பற்களை நர நரவென்று கடித்துக் கொண்டே கேட்டார்.

‘‘இருக்கின்ற இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடினால் எப்படி கிடைக்கும்?’’ என ஏளனமாக சொன்னார் அங்கபூபதி. ‘‘எனில் இருக்கும் இடத்தை காட்டு’’ என்று அமைச்சர், அவரை பிடித்து தள்ளினார். அதனால், சற்றும் மனம் தளராமல் நெஞ்சை நிமிர்த்திய அங்கபூபதி, அனைவரையும் அழைத்துக் கொண்டு பூரி ஜெகன் நாதர் கோயிலுக்கு சென்றார். அங்கே காலை வேளை பூஜை செய்வதற்காக பட்டர் கோயிலின் நடையை திறந்தார். அங்கே ஜெகன் நாதரின் திருமார்ப்பில் அந்த வைரம் மின்னி கொண்டு இருந்தது. அதைக் கண்டு அமைச்சர் உட்பட அனைவரும் அரண்டு போனார்கள்.

“பட்டரே… எப்படி இந்த வைரம் இங்கே வந்தது?’’ என கேட்டார்கள். அவரும் மெல்ல விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார். ‘‘மூன்று நாட்களுக்கு முன் நடையை திறக்கும் போது ஜெகன் நாதர் பாதத்தில் இருந்தது இந்த வைரம். அதை கண்டு நாங்கள் எல்லாம் அதிசயித்து நின்ற போது, ஒரு அசரீரி கேட்டது. ‘‘இது எனக்கு, அங்கபூபதி கொடுத்தது. இதை ஒரு மாலையாக செய்து எனக்கு அணிவியுங்கள்’’ என்று ஜெகன் நாதர் எங்களுக்கு ஆணையிட்டார். அதன் படியே நாங்கள் இப்படி செய்தோம்’’ என்று அர்ச்சகர் சொல்லி முடிக்கவும், வேரற்ற மரம் போல அங்கபூபதியின் காலில் விழுந்து அமைச்சர் மன்னிப்பு வேண்டினார்.

‘‘தங்கள் எவ்வளவு பெரிய மகான் என்பதை அறியாமல் உங்களுக்கு இவ்வளவு தீங்கு செய்துவிட்டேனே’’ என வருந்தினார். அவரை ஆதவராக தூக்கி அணைத்தார் அங்கபூபதி. ‘‘எல்லாம் ஜெகன் நாதன் அருள்’’ என்று சொல்லி அவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். விஷயம் அறிந்த நாட்டின் மன்னனான ராய சிம்மனும், அங்கபூபதியிடம் வந்து வணங்கி மன்னிப்பு வேண்டினார். ஜெகன்நாதர் அருளால் முதலில் விஷத்தை வென்றார். பிறகு வைரத்தை வென்றார்.

பிறகு அமைச்சரையும் நாட்டு மன்னரையும், மரணத்தையும் வென்றுவிட்டார். அங்கபூபதியின் அற்புதமான இந்த வரலாற்றை, பூரி ஜெகன் நாதரின் பக்தர்களின் சரிதத்தை எடுத்து சொல்லும், ‘‘பக்த மாலை’’ என்ற நூல் விரிவாக சொல்கிறது. அங்க பூபதியை போல நாமும், ஜெகன்நாதன் பதம் பணிந்து பெறுதற்கு அறிய பேறு பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post ஜெகன்நாதன் அருளால் ஜகத்தையே வெல்லலாம்! appeared first on Dinakaran.

Tags : Jagannath ,Kumkum ,Anmikam Raya Singhan ,Anga Bhupathi ,Rajakumars ,Annan Raya Singhan ,
× RELATED குதிகால் வலி