×

பேரவையில் தேசிய கீதத்தை அவமதித்த புகார் 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்கு: மேற்குவங்க போலீஸ் அதிரடி

கொல்கத்தா: மேற்குவங்க பேரவையில் தேசிய கீதத்தை அவமதித்த புகாரின் அடிப்படையில் 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேற்குவங்க சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்றும் அவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது பாஜக எம்எல்ஏக்கள் சிலர் பேரவையில் இருந்து வெளியேறினர். தேசிய கீதத்தை அவமதித்ததாக கூறி, பாஜக எம்எல்ஏக்கள் மீது திரிணாமுல் மூத்த தலைவர் சோபந்தேப் சட்டோபாத்யாய், சபாநாயகர் பிமன் பானர்ஜியிடம் புகார் அளித்தனர். அதற்கு பதிலளித்த சபாநாயகர், ‘தேசிய கீதத்தை அவமதித்தால் வழக்கு பதிவதற்கான நடைமுறைகள் உள்ளன.

பாஜக எம்எல்ஏக்கள் தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்ததாக முதல்வர் மம்தா பானர்ஜியும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்போம்’ என்றார். நேற்றைய அவை நடவடிக்கைகள் முடிந்த பின்னர், சட்டமன்ற செயலாளர் சுகுமார் ரே, ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில், தேசிய கீதத்தை அவமதித்த பாஜக எம்எல்ஏக்கள் மீது புகார் அளித்தார். அதனடிப்படையில் சட்டசபையில் தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக கூறி 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

அதில், தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, தேசிய மரியாதை சின்னங்களை அவமதிப்பது தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏவும் எதிர்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரியை, அந்த எப்ஐஆரில் சேர்க்கக் கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.இதுகுறித்து மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், ‘தங்களை தேசியவாத கட்சி என்று கூறிக் கொள்ளும் அவர்கள், தேசிய கீதத்தை அவமதிக்கலாமா’ என்று கேள்வி எழுப்பினார்.

The post பேரவையில் தேசிய கீதத்தை அவமதித்த புகார் 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்கு: மேற்குவங்க போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,West Bengal Police ,Kolkata ,West Bengal Assembly ,Dinakaran ,
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...