×

350 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது: காவல் துறை, உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

திருவள்ளூர்: வளசரவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது பர்கத்துல்லா, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், வில்லிவாக்கம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பைக்கில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அதனால் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர், பைக்கில் கொண்டு வந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அதற்குள் 50 கிலோ குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் இருந்தது. விசாரணையில், அவர், பூந்தமல்லி அம்பாள் நகரை சேர்ந்த மாணிக்சந்த் (41) என்பது தெரிந்தது. அதேபோல் போரூர் அடுத்த காரம்பாக்கம் வஉசி தெருவில் உள்ள ஒரு ஆண்கள் விடுதியில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனைக்கு அனுப்புவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே வளசரவாக்கம் போலீசார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், வில்லிவாக்கம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவர் ரவிச்சந்திரன் ஆகியோர் அந்த விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தங்கியிருந்த காஞ்சிபுரம் மாவட்டம், சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்த முத்துராஜா (34) என்பவர் ஹான்ஸ், பான்பராக், கூல் லிப், குட்கா போன்ற போதைப் பொருட்களை 300 கிலோ அளவிற்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். வெவ்வேறு இடங்களில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மாணிக்சந்த், முத்துராஜா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

The post 350 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது: காவல் துறை, உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Police Department ,Food Safety Department ,Thiruvallur ,Valasaravakkam police ,Valasaravakkam ,Dinakaran ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...