×

சித்தாமூர் ஒன்றியத்தில் மக்களிடம் 5 ஆயிரம் மனுக்கள் பெற்ற எம்எல்ஏ

செய்யூர்: செய்யூர் தொகுதியில் ‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’ எனும் தலைப்பில் கிராம மக்களிடம் இருந்து பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறுவதற்கு, கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று சித்தாமூர் ஒன்றியத்தில் அடங்கிய சூனாம்பேடு கிராமத்தில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். இதில் சித்தாமூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஏழுமலை, செய்யூர் தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சிற்றரசு, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று, தங்களுக்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாத வீட்டுமனை பட்டா மாறுதல், பட்டா குறித்த திருத்தங்கள், புதிய வீடுகள் கட்டுதல், முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பனையூர் பாபு எம்எல்ஏவிடம் வழங்கினர். இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் வழங்கிய அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பனையூர் பாபு எம்எல்ஏ உறுதியளித்தார்.

இதில் மாவட்ட விசிக செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன், மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் பிரேமா சங்கர், அவைத்தலைவர் வரதராஜன், கவுன்சிலர்கள் ஜீவா பூலோகம், பாரதி காண்டீபன் இனிய மதிக்கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீதா முனுசாமி, குணசுந்தரி, விஜயா முத்தமிழ் பாக்கியநாதன், பெருமாள், ராஜசேகர், அஞ்சலை மாரிமுத்து, மணிமேகலை மோகனசுந்தரம், விசிக ஒன்றிய செயலாளர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் கொளத்தூர், கல்பட்டு, கடுக்கலூர், சித்தர்காடு, அமைந்தகரணை, விளங்காடு, போந்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் பனையூர் பாபு எம்எல்ஏ பங்கேற்று, அப்பகுதி மக்களிடம் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் கிராம மக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்பட கலந்து கொண்டனர்.

The post சித்தாமூர் ஒன்றியத்தில் மக்களிடம் 5 ஆயிரம் மனுக்கள் பெற்ற எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Chittamur Union ,Seyyur ,Seyyur Constituency ,
× RELATED செய்யூர் இசிஆர் சாலையில் விபத்து: 2 வாலிபர்கள் பரிதாப பலி