×

வீடு புகுந்து பயங்கரம் கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: 9ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியை சரமாரியாக கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவரது பெற்றோர் அங்குள்ள பகுதியில் மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவி, தனியாக டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த சிறுவன் ஒருவன் திடீரென மாணவியை சரமாரி தாக்கி, தான் கொண்டு வந்த கத்தியால் தலை, வயிறு மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரி குத்தியுள்ளார்.

திடீரென நடந்த தாக்குதலால் நிலைகுலைந்த மாணவி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு மாணவியின் பாட்டி வந்துள்ளார். அப்போது அந்த சிறுவன் மூதாட்டியையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இந்த தாக்குதலில் மாணவி படுகாயமடைந்தார், அவரது பாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்களது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மாணவியை தீவிர சிகிச்சைக்காக நள்ளிரவு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கந்திலி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், மாணவியிடம் விசாரித்தனர். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் சித்திக்கு சொந்தமான செல்போனை தற்போது கத்திக்குத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் திருடியுள்ளான். இதையறிந்த கல்லூரி மாணவி அந்த சிறுவனை காட்டிக்கொடுத்தாராம். இதனால் அந்த சிறுவன் ஆத்திரத்தில் இருந்ததும், இதனால் தனியாக இருந்த மாணவியை வீடு புகுந்து கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் 9ம் வகுப்பு மாணவன் என்பது தெரிய வந்தது. மேலும் அதே பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை நேற்றிரவு பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post வீடு புகுந்து பயங்கரம் கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: 9ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Sharamari ,
× RELATED தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள்...