×

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பரபரப்பு!: பிரபல 15 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக தலைநகரான பெங்களூரு நகரின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான 15 தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை 8:30 மணியளவில் ஒரு இமெயில் வந்துள்ளது. அந்த இமெயிலில் அந்த பள்ளியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே 8 மணி முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கிவிட்டனர். இதனால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்தந்த பள்ளிகள் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்த போது தான் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். அச்சமயம் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

பெரும்பாலும் இவை பொய்யான தகவலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உறுதியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட வேண்டாம், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 15 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெங்களூருவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

The post கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பரபரப்பு!: பிரபல 15 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : KARNATAKA CAPITAL ,BANGALORE ,Karnataka ,Bengaluru ,
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...