×

ஹைடெக் லேப் வசதியுள்ள 6,029 அரசு பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் ஒவ்வொரு பள்ளியிலும் 5 மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு

வேலூர், டிச.1: மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டத்தை ஹைடெக் லேப் வசதியுள்ள 6,029 அரசு பள்ளிகளில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 2022-2023 மிஷன் இயற்கை திட்டத்தில் 3,700க்கு மேற்பட்ட பள்ளிகள் மாநில அளவில் கலந்துகொண்டன. அதில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளில் அமைச்சரவையும் நிர்ணயிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு பள்ளிகள் பசுமை நடைமுறைகளை பின்பற்றி, தனது பள்ளிகளையும், வீடுகளையும், சமுதாயத்தையும் சுற்றுப்புற சூழலை சீராக்கும் முறையில் மாற்ற மாணவர்கள் பங்காற்றினர். பள்ளிகளில் காய்கறி தோட்டம், மழைநீர் சேகரிப்பு முறை செயல்படுத்துதல், கழிவு மேலாண்மை, நெகிழி ஒழிப்பு, விழிப்புணர்வு பேரணிகள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம் மாற்றங்களை உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாற்றங்களின் காட்சிகளை காணொளி மூலம் பதிவிட்டு சிறந்த 5 பள்ளிகளுக்கும் 25 மாணவர்களுக்கும் விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை டபள்யு, டபள்யு, எப் துணையுடன் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டத்தை 2023-2024ம் ஆண்டில் ஹைடெக் லேப் வசதியுள்ள 6,029 அரசு பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. கடந்த ஆண்டில் நடைபெற்ற செயல்திட்டத்தின் தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஹைடெக் லேப் வசதிகள் உள்ள தங்கள் பள்ளிகளின் பெயர்களை தங்கள் சுற்றுச்சூழல் ஆசிரியர்கள் பெயர்களுடன் இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளை இணைய தளத்தில் பதிவு செய்ய வரும் 5ம்தேதி கடைசி நாள் ஆகும். இதில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

மேலும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், பள்ளியின் சுற்றுச்சூழல் ஆசிரியர்களுக்கும் இத்திட்டத்திற்கான வழிகாட்டு பயிற்சிகள் 2023 டிசம்பர் முதல் வாரம் இணைய வழி வாயிலாக நடைபெறும். இப்பயிற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியிலிருந்து ஒரு சுற்றுச்சூழல் ஆசிரியரை நியமிக்க வேணடும். இதற்கான தேதி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு குறுந்தகவல் வாயிலாக அனுப்பப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 5 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர்களை சுற்றுச்சூழல் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் இறுதியில் 2024 மார்ச் கடைசி வாரத்தில் சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களை மாநில அளவில் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்முறைகள் மிஷன் இயற்கை கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மிஷன் இயற்கை கையேடு மற்றும் குறும்படங்கள், தகவல்கள் இணைய வழி வாயிலாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மிஷன் இயற்கை திட்டத்தை செயல்படுத்த தேவையான பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்த அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஹைடெக் லேப் வசதியுள்ள 6,029 அரசு பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் ஒவ்வொரு பள்ளியிலும் 5 மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vellore ,School Education Department ,
× RELATED பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு...