×

மழைநீரை அகற்ற இரவு, பகலாக உழைக்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு அண்ணாமலை பாராட்டு

நாகப்பட்டினம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நான்காம் கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். தொடர்மழை மற்றும் புயல் அறிவிப்பு காரணமாக வரும் 5ம் தேதி வரை நடைபயணம் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜ சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் வேளாங்கண்ணியில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அண்ணாமலை, நேற்று வேளாங்கண்ணி பேராலயம் சென்று அங்கு வழிபாடு நடத்தினார். பின்னர் நாகப்பட்டினம் அருகே உள்ள கோரக்கர்சித்தர் கோயிலுக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து காரைக்கால் புறப்பட்டு சென்றார்.

அப்போது அண்ணாமலை அளித்த பேட்டி:
வரும் 6ம் தேதியில் இருந்து நடைபயணத்தை கடலூரில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சியின் கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கின்றனர்.

இரவு, பகல் கூட பார்க்காமல் பணியாற்றும் அவர்களை நான் பாராட்டுகிறேன். இயற்கை இடர்பாடு காலத்தில் சென்னை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை மாற்றம் செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை தீரும். இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post மழைநீரை அகற்ற இரவு, பகலாக உழைக்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு அண்ணாமலை பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Nagapattinam ,BJP ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணி தேவை;...