×

தொடர் மழை பெய்தாலும் அரசு பஸ்கள் சீராக இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: தொடர் மழை பெய்தாலும் அனைத்து பேருந்துகளும் சீராக இயக்கப்பட்டன. மேலும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3,232 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் மாலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால் நகரின் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கத்தில் அதிகபட்சம் 15 நிமிடங்கள் வரை மட்டுமே காலதாமதம் ஏற்பட்டது.

மழை காரணமாக பேருந்துகள் எதுவும் ரத்து செய்யக்கூடாது என்றும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் முழு சுற்றையும் நிறைவு செய்வதை பணிமனை மேலாளர்கள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. பேருந்துகள் இயக்கம் தொடர்பாக புகார்கள் எதுவும் நேற்று பெறப்படவில்லை. அதேபோல சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 2100 பேருந்துகள் முழுவதுமாக இயக்கப்பட்டது. மேலும் பேருந்துகள் இயக்கம் மற்றும் பொது மக்கள் புகார்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகளின் மேற்கூரை, படிக்கட்டுகளை கண்காணித்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு பேருந்துகளில் பிரேக், கிளட்ச் உள்ளிட்ட அம்சங்களை பராமரிக்க வேண்டும். பணிமனைகளில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அரசு பேருந்துகளில் மழை நீர் கசிவது குறித்த வீடியோ வெளியாகி உள்ளதால் அதை தவிர்க்கும் வகையில் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தொடர் மழை பெய்தாலும் அரசு பஸ்கள் சீராக இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Transport Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம்...