×

பெண் வியாபாரியின் சகோதரரை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 6 மாத சிறை: செங்கல்பட்டு கோர்ட் தீர்ப்பு

செங்கல்பட்டு: பெண் வியாபாரியின் சகோதரரை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் 10 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பளித்துள்ளது. செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாதி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு. இவரது சகோதரி அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டில் அவரது இட்லி கடைக்கு வந்த ரமேஷ் (32) என்பவர், அங்கு கடை நடத்தி வந்த சக பெண் வியாபாரிகளிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அன்புவின் சகோதரி இதுகுறித்து அன்புவிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அன்பு உடனே தனது இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் வடபாதி பகுதியில் உள்ள தன் சகோதரியின் இட்லி கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ரமேஷ், அன்புவை சராசரியாக முகத்தில் தாக்கியுள்ளார்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் அன்பு கடந்த 2013ம் ஆண்டு புகார் கொடுத்தார். இதில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமினில் ரமேஷ் வெளியே வந்தார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து வந்தது. இந்தநிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குற்றவாளியான ரமேசுக்கு 6 மாத கால சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து குற்றவாளியான ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பெண் வியாபாரியின் சகோதரரை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 6 மாத சிறை: செங்கல்பட்டு கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu Mahila Court ,Dinakaran ,
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...