×

செங்குன்றம் பகுதிகளில் வெள்ளத்தில் தவித்த மக்கள் படகு மூலம் மீட்பு: தீயணைப்பு துறையினர் நடவடிக்கை

புழல்: செங்குன்றம் பகுதிகளில், மழை வெள்ளத்தில் தவித்த மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். சென்னை செங்குன்றம், புழல் மற்றும் சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். மேலும் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரைப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் நகரில் 38க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்த நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வேலைக்கு செல்கின்றவர்கள் வெளியே வரமுடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், மழைநீரில் பாம்புகள், விஷ பூச்சிக்கள் வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுசம்பந்தமாக செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் வீரர்கள் விரைந்துவந்து படகு மூலம் வீடுகளில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்த பகுதியில் உள்ள சமுதாயக்கூடம், அரசு பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உள்பட பல உதவிகளை அரசின் சார்பில் செய்து கொடுத்தனர்.

The post செங்குன்றம் பகுதிகளில் வெள்ளத்தில் தவித்த மக்கள் படகு மூலம் மீட்பு: தீயணைப்பு துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Senkunram ,Puzhal ,Chennai ,Senggunram ,Cholavaram… ,Dinakaran ,
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!