×

மீஞ்சூர் அருகே பழுதடைந்த சாலைகள் ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே மற்றும் நாலூர் பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலை மீஞ்சூர் பகுதிகளில் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இங்கு, வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின்நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டைனர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள் என உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும் வல்லூர் நூறடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும் செல்கின்றன. இதனால், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பட்டமந்திரி பகுதியில் இருந்து சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பழுதடைந்த சாலைகளையும், நாலூர் பகுதியில் உள்ள அதேப்போன்ற சாலைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சாலைகளை பார்வையிட்ட பின் மாவட்ட கலெக்டர், ஜனவரி மாதம் தொடங்கியதும், நெடுஞ்சாலை பணிக்கான டெண்டர் விடப்பட்டு, தார் சாலைகள் சீரமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், பொன்னேரி சப் – கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர், செயற்பொறியாளர் பாரதிதாசன், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், செயல் அலுவலர் வெற்றி அரசு, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், குமார், துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள்,அரசு துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

The post மீஞ்சூர் அருகே பழுதடைந்த சாலைகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Meenjur ,Ponneri ,Meenjoor Regional Development Office ,Nalur ,Meenjoor ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில்...